யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின

🕔 February 4, 2016
Yositha - 876யோஷித்த ராஜபக்ஷ, சி.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல  ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவராக யோசித செயற்பட்டு பரிமாறிக்கொண்ட 5000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களும், சில குறுந்தடுகளும், தலைவர் எனும் றப்பர் முத்திரை, யோசித்தவின் கையெழுத்துடன் கூடிய றப்பர் முத்திரை மற்றும் நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் அனுப்பிய கடிதங்கள் என்பன இந்த ஆவணங்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபை மீது போலி ஆவணம் தயார் செய்தமை, நம்பிக்கையை மீறிய குற்றம், நிறுவன சட்டத்தை மீறியமை, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவு நடடிக்கை எடுத்து வருகிறது.

அரசுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை தொலைக்காட்சி நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை மற்றும் கட்டிடத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில் யோசித்த உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் தெளிவான பதில்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்காக பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் ஒன்றுக்கான உதிரிப் பாகங்களுக்காக இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பினால் செலுத்தப்பட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 482 பவுண்களுக்கான கட்டணச்சீட்டும் தேடுதலின் போது கிடைத்துள்ளது.

இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷ விரைவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.

சீ.எஸ்.என். ஊடக வலையமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் தொடர்பில், அந் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் உள்ளிட்ட நபர்கள் கைது செய்ய்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

ஆயினும், யோசித ராஜபக்ஷ தரப்பில் – அவர் சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் இல்லை என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்