பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை: சரணடைந்த நிலையப் பொறுப்பதிகாரிக்கு பிணை
பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை – பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று (13) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
மேற்படி பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகாரளிக்கப்பட்டமையினை அடுத்து, குளியாப்பிட்டி பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குளியாப்பிட்டி நிலையப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் (ஐபி) இன்று பிற்பகல் சட்டத்தரணியுடன் நீதிமன்றில் சரணடைந்தார்.
இதனையடுத்து சந்தேக நபரை 05 லட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணை நாளான மார்ச் 06ஆம் திகதி வரை, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குளியாப்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டது.
சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், குறித்த பொறுப்பதிகாரி மீது – திணைக்கள ரீதியாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.