முஷாரப் எம்பியின் ‘ஆட்கள்’ உழைப்பதற்கு, உள்ளூராட்சி சபைகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு: கிழக்கு ஆளுநரும் உடந்தையா?

🕔 February 10, 2024

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை அரசியல் தேவைகளுக்காகப் பயன்டுத்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் உடந்தையாக உள்ளார் என – குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆளுந்தரப்புக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் நிதியை, கிரவல் வீதிகளை அமைப்பதற்கு வழங்குமாறு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்படி வீதிகளை அமைக்கும் பணிகள் – குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சன சமூக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எடுத்துக்காட்டாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியிலிருந்து சில இடங்களில் கிரவல் வீதிகளை அமைத்துத் தருமாறு, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்துமூலமான வேண்கோள் ஒன்றினை முன்வைத்தார். இதனையடுத்து, குறித்த வேண்டுகோளினை நிறைவேற்றிக் கொடுக்குமாறு – கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார் என அறிய முடிகிறது. இதன்படி மேற்படி வீதிகளை அமைத்துக் கொடுக்குமாறு – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி தற்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் பிரதேசத்துக்கு 20 லட்சம் ரூபாயும், பாலைமுனைக்கு 10 லட்சம் ரூபாயும், அட்டாளைச்சேனைக்கு 20 லட்சம் ரூபாயும் கிரவல் வீதிகளை அமைப்பதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சொந்த சேமிப்பிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு வீதிகளை அமைக்கும் வேலைகள், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் அமைப்பாளர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள சனசமூக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் அமைப்பாளர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் உழைப்பதற்காகவே, இந்த கிரவல் வீதிகள் அமைக்கப்படவுள்ளதாக – குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட எந்தவொரு பகுதியிலும் கிரவல் வீதிகளை அமைப்பதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபை கலைக்கப்படுவதற்கு முன்னர், அதன் சபைக் கூட்டத்தில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, உள்ளூராட்சி சபைகளின் நிதிகளை இவ்வாறு அரசியல் தேவைகளுக்காகவும், அரசியல்வாதிகளின் எடுபிடிகள் உழைப்பதற்காகவும் பயன்படுத்துவற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதை, கிழக்கு மாகாண ஆளுநர் நிறுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உண்மையாகவே மக்கள் பாவனைக்கு வீதிகள் தேவைப்படுமாயின், அவற்றினை கிரவல் வீதிகளாக அல்லாமல் – கொங்றீட் வீதிகளாக, குறித்த உள்ளூராட்சி சபைகளின் நேரடிக் கண்காணிப்பில் அமைத்துக் கொடுப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்