மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம்

🕔 January 31, 2024

யூ.எல். மப்றூக்

தரஸாக்களில் மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் (மௌலவி மற்றும் ஹாபிழ்கள்) மிகக் கடுமையாகத் தாக்குகின்றமை தொடர்பான செய்திகள் அண்மைய நாட்களில் அதிகம் வெளியாகி வருகின்றன.

சாய்ந்தமருதில் கடந்த டிசம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டார். அந்த மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டதை அடுத்து, மதரஸாவின் நிர்வாகி கைது செய்யப்பட்டு, தற்போது வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்த தகவலாகும்.

அதேவேளை, இலங்கையில் 140 வருடங்களுக்கு முன்னர் – முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட வெலிகம பாரி மதரஸாவிலும் – மாணவர் ஒருவரை அங்குள்ள ஆசிரியர் ஒருவர் (ஹாபிஸ்) மிகக்கடுமையாக தாக்கியமை பற்றி செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்து எழுந்த பிரச்சினையின் காரணமாக, அந்த மதரஸாவை தற்காலிகமாக மூடுமாறு – இம்மாதம் 19ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தரவிட்டது.

இவற்றினையெல்லாம் கருத்திற் கொண்டு, மதரஸாக்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களை கடுமையாகத் தாக்குவதன் உளவியல் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு, மனநல வைத்தியர் யூ.எல். சரப்டீனிடம் பிபிசி தமிழ் பேசி வெளியிட்ட கட்டுரையின் ஒருபகுதியை இங்கு வழங்குகிறோம்.

ஆசிரியர் ஒருவரின் நடத்தையில் அவரின் ஆளுமைப் பண்புக் காரணிகளான குணாதிசயங்கள், மனோபாங்கு மற்றும் உளக் காரணிகள் போன்றவை தாக்கம் செலுத்துவதாக, வைத்தியர் சரப்டீன் கூறுகின்றார்.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான இடைவினை ஆக்கமும் (interpersonal relationships) கற்றல் – கற்பித்தலில் தாக்கம் செலுத்துவாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அந்த வகையில் ஆளுமைப் பண்பில் குறைபாடு கொண்ட ஆசிரியர்கள், எடுத்துக்காட்டாக கோபத்தை அடக்க முடியாத, மாணவர்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆசிரியர்கள், மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்துவார்கள் என அவர் தெரிவிக்கின்றார்.

“இவ்வாறானவர்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும், ஒத்துணர்வு (Empathy) மற்றும் அனுதாபம் (Sympathy) போன்றவற்றை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்பர். இவர்கள் வன்முறை மற்றும் விரக்தியை வெளிப்படுத்துவதோடு, எளிதாக பிரச்னைகளைத் தீர்க்க முடிாதவர்களாகவும் இருப்பர். இவ்வாறான ஆசிரியர்கள்தான் மாணவர்களை உடல் ரீதியாக தாக்குகின்றனர்” என, வைத்தியர் சரப்டீன் விளக்கினார்.

மாணவர்களுக்கு பாடமொன்று விளங்கவில்லை என்றால், ஏன் அவருக்கு அந்தப் பாடம் விளங்கவில்லை என்பதை, ஆசிரியர்கள் விஞ்ஞானபூர்வமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் வைத்தியர் சரப்டீன். பாடங்களை விளங்கிக் கொள்ளாமைக்காக மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என அவர் வலியுறுத்துகின்றார்.

”மாணவர்களின் கல்வியில், அவர்களின் உள நலத் தன்மைகள், அவர்களின் சூழல் உள்ளிட்ட பல விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. இவற்றினைப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்கள், தாம் எதிர்பார்க்கும் விஷயங்களை மாணவர்கள் செய்யாத போது விரக்தியடைகின்றார்கள். அந்த விரக்தி அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும், அந்தக் கோபம் வன்முறையாக மாறும். அப்போது அந்த ஆசிரியர்கள், உடல் ரீதியாக மாணவர்களைத் தண்டிப்பார்கள்” என அவர் விவரித்தார்.

மாணவர்களை உடல் ரீதியாக ஆசிரியர்கள் தண்டிக்கின்றமை, ஆசிரியர்களிடமுள்ள பிரச்னையாகும் என மருத்துவர் சரப்டீன் கூறுகிறார். மாணவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கும் ஆசிரியர்கள், தமக்குள் ஏற்படும் விரக்தியை அல்லது தமக்குள் ஏற்படும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

மாணவர்கள் முரண்படும் போது, ஏன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்பதைச் சிந்திக்காமல், முரண்பாடுகளுக்கு எதிரான நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள்தான், உடல் ரீதியாக மாணவர்களை தண்டிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

“இதனால்தான் ‘கல்வி உளவியல்’ (Educational psychology) எனும் பாடம் ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. ‘மாணவர்களுக்கு கல்வி ஊட்டுவதில் உளவியல் பங்குநிலையை எவ்வாறு பயன்படுத்துவது’ என்பதைத்தான் அந்தப் பாடத்தில் கற்றுக் கொடுக்கின்றனர்”.

”ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொடர்பில், மாணவர் மீது ஆசிரியருக்கு ஓர் ஒத்துணர்வு (Empathy) இருக்க வேண்டும். மாணவர்களின் நிலைமையை ஆசிரியர்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்”.

”இவ்வாறான புரிதல்கள் கல்வி நிறுவனங்களிலுள்ள ஆசிரியர்களிடத்தில் சரியான முறையில் இல்லாமல் போகும் போதுதான், அங்குள்ள மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன” என வைத்தியர் சரப்டீன் விளக்கமளித்தார்.

”மாணவர்களை உடல் ரீதியாக ஆசிரியர்கள் தண்டித்தமையை, சமூகம் அங்கீகரித்த ஒரு காலம் இருந்ததது. ஆனால், நாம் விரும்பிய விளைவை, உடல் ரீதியான தண்டனைகள் ஏற்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொண்ட போதுதான், அந்தத் தண்டனை முறை – பிழை என்கிற முடிவு எட்டப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.

எனவே, மதரஸாக்களிலுள்ள ஆசிரியர்களுக்கு உடல் ரீதியான தண்டனை மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு கல்வி உளவியலைக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் வைத்தியர் சரப்டீன் சிபாரிசு செய்கின்றார்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்