18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

🕔 January 30, 2024

மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது.

காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும் மாபலகம என்பவர் தனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

காலி நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி லிமிடெட்’ (LECO), தனது வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மின்சாரக் கட்டணமாக தமக்கு வழங்கப்பட்டிருந்த 6650 ரூபா18 சதத்தை செலுத்துவதற்காக ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி’அலுவலகத்துக்கு விசும் மாபலகம சென்ற போது, பட்டியலிலுள்ள 18 சதத்தையும் செலுத்த வேண்டுமா என விசாரித்துள்ளார். அதற்கு இவ்வளவு சிறிய தொகைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று காசாளர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து 6650 ரூபாயை செலுத்திய அவர், மீதமுள்ள 18 சதத்தை செலுத்தாமல் விட்டுள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு அவரின் வீட்டுக்கான மின்சார இணைப்பை ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி’ துண்டித்திருந்தது. மேலும், மின் இணைப்பை மீளப்பெறுவதற்கு, மேலதிக கட்டணமாக 1,231 ரூபாய் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தெளிவுபெறுவதற்காக காலி, ரிச்மண்ட் ஹில்லில் உள்ள ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி’ அலுவலகத்துக்கு – தான் கட்டணம் செலுத்தியமையை நிரூப்பிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் விசும் மாபலகம சென்றுள்ளார். ஆனால், அந்த அலுவலகத்தில் எந்த ஒரு பொறுப்பான அதிகாரியையும் சந்தித்து அவரால் புகாரளிக்க முடியவில்லை.

இதனையடுத்து ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி’ அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன்னர், அந்த அலுவலக ஊழியர்களிடம் – தனக்கு நேர்ந்த அநீதிக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் ‘லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பனி’ அதிகாரி ஒருவர் விசும் மாபலகமவைத் தொடர்புகொண்டு, தங்கள் தரப்பில் பெரிய தவறொன்று நடந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.

மேலும் மின் விநியோகத்தை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி விசும் மாபலகமவிடம் உறுதியளித்தார்.

Comments