இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

🕔 January 25, 2024

– அஹமட் –

கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை தொடர்பில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபையில் – முதலமைச்சு, கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு என 05 அமைச்சுக்கள் உள்ளன.

இந்த அமைச்சுகளுக்கான செயலாளர்களாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரும், ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவியேற்ற ஆரம்ப காலப் பகுதியில் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தரத்திலுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ. மன்சூர் எம்.எம். நஸீர் மற்றும் றிபா ஜெலீல் ஆகியோர் – கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்படுவதற்குரிய அனைத்து தகைமை மற்றும் சிரேஷ்டத்துவத்தைக் கொண்டிருந்தும், அவர்களில் ஒருவரைக் கூட, அமைச்சின் செயலாளராக ஆரம்பத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமிக்கவில்லை.

ஆனால் வெறும் கண்துடைப்புக்காக பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் பேரவைச் செயலாளராக மன்சூர் நியமிக்கப்பட்டதோடு, பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) பதவிக்கு நஸீர் நியமிக்கப்பட்டார். அதேவேளை, பிரதிப் பிரதம செயலாளர் (தனிநபர் மேம்படுத்தல் மற்றும் பயிற்சி ) பதவிக்கு றிபா ஜெலீல் – ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன ரீதியான பாகுபாட்டுடன் செயற்படுவதாகவும், முஸ்லிம்களை புறக்கணிப்பதாகவும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. மேலும் சமூக ஊடகங்களிலும் ஆளுநருக்கு எதிராக இவ்விடயம் தொடர்பில் பதிவுகள் வெளியாகின.

இந்த நிலையினை சமாளிக்கும் பொருட்டு, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடந்த வருடம் ஜுன் மாதம் 18ஆம் திகதி ஏ. மன்சூரை – ஆளுநர் நியமித்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, வீதி அபிருத்தி அமைச்சின் செயலாளராக கடந்த 07 மாதங்கள் பணியாற்றி வந்த மன்சூர், அந்தப் பதவியிலிருந்து ஆளுநரால் நீக்கப்பட்டதோடு, அந்தப் பதவிக்கு அவரை விடவும் சிரேஷ்டத்துவம் குறைந்த எம். கோபாலரட்ணம்நேற்று புதன்கிழமை (24) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் தற்போது கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சின் செயலாளராக என். மணிவண்ணன், கல்வியமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திஸாநாயக்க, விவசாய அமைச்சின் செயலாளராக ஐ.கே.ஜி. முத்துபண்டா, சுகாதார அமைச்சின் செயலாளராக என். சிவலிங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம். கோபாலரட்ணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் என். மணிவண்ணன் மற்றும் என். சிவலிங்கம் ஆகியோர் இலங்கை நிர்வாக சேவை தரம் – I எனும் நிலையிலுள்ளவர்கள். ஆனால் மன்சூர், நஸீர் மற்றும் றிபா ஜெலீல் ஆகியோர் சிரேஷ்ட தரத்தையுடையர்களாவர். அதாவது மணிவண்ணன் மற்றும் சிவலிங்கம் ஆகியோர் – மன்சூர், நஸீர் மற்றும் றிபா ஜெலீல் ஆகியோரை விடவும் இலங்கை நிருவாக சேவை தர நிலையில் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க என். மணிவண்ணனுக்கு முதலமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் என இரண்டு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று என். சிவலிங்கம் – சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கல்வியமைச்சுடன் இதுவரை காலமும் இணைந்திருந்த காணி அமைச்சை பிரித்தெடுத்து, அதனை வீதி அபிவிருத்தி அமைச்சுடன் இணைத்து, அந்த அமைச்சின் செயலாளர் பதவிக்கு கோபாலரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற நிலையில், ஆளுநர் செந்தில் தொண்டமான், முஸ்லிம்களை தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றமையானது, இனவாதமான செயற்பாடு என சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மிக முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்களை நியமிக்காமல் புறக்கணித்து வரும் ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர்களுக்கு கீழுள்ள திணைக்களத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களாக – அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகளுக்கு இணங்க, முஸ்லிம்கள் சிலரை – கண்துடைப்புக்காக நியமித்துள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநரின் மேற்படி இனவாதப் போக்கை – அந்த மாகாணத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், இந்த அநீதியினைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக – கிழக்கு ஆளுநரிடம் தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் -தனிப்பட்ட ரீதியில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு பேசாமடந்தைகளாக இருக்கின்றனர் எனவும் முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

மன்சூர் மற்றும் றிபா ஜெலீல் ஆகியோருக்கு – வழங்கப்பட வேண்டிய பதவிகள் குறித்து, பொதுச் சேவை ஆணைக்குழு வெளியிட்ட சிபாரிசுகளை மேலே காணலாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்