இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

🕔 January 24, 2024

ணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 46 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் ஒத்துப்போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிய போதிலும், இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 62 வாக்குகள் கிடைத்தன.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முரணானவை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் சட்டமா அதிபர் திருத்தங்களுக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அரச தரப்பு அறிவித்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, நாடாளுமன்றத்தில் பதட்டமான சூழ்நிலை உருவானது. ஆனால் அரசாங்கம் எதிர்ப்பைப் புறக்கணித்து திருத்தங்களை அறிவித்ததோடு, நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை நிறைவேற்றியது.

ஆயினும் இந்தச் சட்டமூலம் தொடர்பில் முறையான நடைமுறையை அரசாங்கம் பின்பற்றத் தவறியதாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட ஆசிய இணையக் கூட்டமைப்பு எழுப்பிய கவலைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சித் தரப்பு குற்றம்சாட்டியது.

இணையவழி பாதுகாப்பு மசோதா செப்டம்பர் 2023 இல் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

அதன்பிறகு, இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் பல விதிகள் – அரசியலமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம், தீர்மானித்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்மானங்களின்படி சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுதல், இலங்கையில் சில உண்மை அறிக்கைகளை இணையத்தில் தொடர்புகொள்வதைத் தடைசெய்வதற்கான ஏற்பாடுகள், தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக இணையவழிக் கணக்குகள் மற்றும் தவறான இணையவழி கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, பயன்படுத்தப்படும் இணையவழி இடங்களை அடையாளம் கண்டு பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதையடுத்து, இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்து – இதற்கு எதிராக சுமார் 45 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்