சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள்

🕔 January 21, 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

சௌதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பஞ்ச நிவாரணமாக பணம் அனுப்பிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆணவங்கள் சிலவற்றை – சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்டமையினை அடுத்து, இவ்விடயம் பேசுபொருளாகியது. சௌதி அரேபியாவின் மக்கா – மதீனா நகரங்களில் வசித்த அரேபியர்களுக்கு 1945ஆம் ஆண்டு, இலங்கை முஸ்லிம்கள் மேற்படி நிதியை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலப் பகுதியில் 1945ஆம் ஆண்டுக்கு முன்னர், ஹஜ் யாத்திரைக்காக சௌதி அரேபியாவுக்கு வெளிநாட்டவர்கள் 4, 5 வருடங்களாக செல்வது தடைப்பட்டது. இதன் காரணமாக, ஹஜ் யாத்திரிகர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை எதிர்பார்த்து வாழ்ந்த மக்கா மற்றும் மதீனாவாசிகள் பஞ்சத்தை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில்தான் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் ‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரணக் கமிட்டி’ என்ற பெயரில் குழுவொன்றை உருவாக்கி, நிவாரண நிதி சேகரிக்கத் தொடங்கியதாக, தற்போது வெளியாகியுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரணக் கமிட்டி’ தலைவராக டொக்டர் எம்.ஸீ.எம். கலீல் செயற்பட்டுள்ளார். இவர் இலங்கை முஸ்லிம் லீக் தலைவராகவும், இலங்கை ராஜிய சபையின் (State Council) உறுப்பினராவும் பதவி வகித்துள்ளார்.

பஞ்ச நிவாரணக் கமிட்டியின் செயலாளராக பீ.எஸ். அப்துல் காதிர் என்பவர் இருந்துள்ளார். இவர் இந்தியா தமிழ்நாட்டில் உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் ‘பல்லாக் லெப்பை’ எனும் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் இப்போதும் இலங்கையில் உள்ளது.

பி.எஸ். அப்துல் காதிர்

மேற்படி நிவாரணத்துக்காக கொழும்பு உட்பட 86 ஊர்களில் நிதி சேகரிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சியின் பயனாக 71,832 ரூபாய் 81 சதம் நிதி கிடைத்ததாகவும், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைத்த நிதியில் 50 ஆயிரம் ரூபாயை ஒரு தடவையும், பிறகு ஒரு தடவை 20 ஆயிரம் ரூபாயையும், சௌதி அரேபியாவின் அப்போதைய மன்னர் சுல்தான் அப்துல் அஸீஸ் இப்னு சௌது அவர்களுக்கு ‘ஈஸ்டர்ன் பேங்’ மூலமாக அனுப்பி வைத்ததாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து – தந்தி மூலம் மன்னர் பதிலளித்திருந்தார் எனவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளிவந்த மேற்படி ஆவணங்கள் இரண்டு பக்கங்களை உடையவை. அவற்றில் ஒரு பக்கத்தில் பஞ்ச நிவாரண குழு ஆரம்பித்து – நிதி சேகரிக்கப்பட்டு, அதனை அனுப்பி வைத்த விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. 30.04.1945ஆம் ஆண்டில் அந்த விவரங்கள் எழுதப்பட்டதாகவும் அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி குழு சேகரித்த நிதி தொடர்பான கணக்கறிக்கை இன்னொரு பக்கத்தில் உள்ளது. அது 30.06.1945ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.

பி.ஏ. சதக்

இந்த விவரங்களை அடிப்டையாக வைத்து – இதனுடன் தொடர்பானவர்களை தேடியதில், மேற்படி பஞ்ச நிவாரண குழுவின் செயலாளராக செயற்பட்ட அப்துல் காதிர் என்பவரின் ‘பல்லாக் லெப்பை’ நிறுவனத்தை தற்போது நடத்தி வருபவரும் அவரின் மருமகன் (தங்கையின் மகன்) பி.ஏ. சதக் என்பவரின் மகனுமான பி.எஸ்.ஏ. றபீக் (பாளையம் சதக் அஹமட் றபீக்) என்பவரை பிபிசி தமிழ் கண்டறிந்தது.

றபீக்

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த றபீக், தனது முன்னோர் கொழும்பில் ஆரம்பித்த ‘பல்லாக் லெப்பை’ நிறுவனத்தை நடத்தி வருகின்றார். ‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி’யின் செயலாளராகப் பணியாற்றிய அப்துல் காதிருடைய தந்தையின் பெயரே ‘பல்லாக் லெப்பை’ என றபீக் கூறுகின்றார்.

அவருடன் பேசியதில், தனது தந்தையின் மாமாவான அப்துல் காதிர், ‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி’ செயலாளராக பணியாற்றி, நிதி சேகரித்தமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தற்போதும் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்ததோடு, அவற்றின் பிரதிகளையும் வழங்கினார்.

மக்கா – மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி தொடர்பில் எழுதப்பட்ட தகவல்

இந்தியாவிவிருந்து இலங்கைக்கு – போர்த்துக்கேயர் காலத்திலேயே தமது முன்னோர் வந்துவிட்டார்கள் என றபீக் கூறுகின்றார். அந்த வகையில் தனது மூதாதையர்களில் ஒருவரான தனது தந்தையின் மாமா அப்துல் காதிர், ஒரு குறிப்புப் புத்தகத்தைப் பேணி, அதில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை திகதிளுடன் எழுதி வந்துள்ளார் எனவும் றபீக் தெரிவித்தார். அந்தப் புத்தகம் தற்போது றபீக் வசம் உள்ளது.

பஞ்ச நிவாரண கமிட்டியின் வரவு – செலவு கணக்கு

மேற்படி குறிப்புப் புத்தகத்தின் 30 மற்றும் 31ஆவது பக்கங்களிலேயே ‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி’ பற்றியும், அந்தக் கமிட்டி சேர்ந்த நிதி தொடர்பான வரவு – செலவு பற்றிய விடயங்களும் எழுதப்பட்டுள்ளன.

மக்கா – மதீனாவுக்கான பஞ்ச நிவாரணமாக வசூலிக்கப்பட்ட 71,832 ரூபா 81 சதத்தில், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் – மன்னர் இப்னு சௌது அவர்களின் பெயரில் மக்காகவுக்கு 28.03.1945ஆம் ஆண்டு ‘ஈஸ்ட்டன் பேங்’ மூலம் அனுப்பப்பட்டதாக வரவு – செலவு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் 01.09.1945ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.

மிகுதிப் பணத்தில் டி.டி (T.T) கமிஷன், தந்தி, விளம்பரம், அச்சுக்கூலி, பேப்பர் கவர், தபால், சம்பளம் மற்றும் சில்லறை செலவுகளுக்காக 956 ரூபாய் 43 சதம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக எஞ்சிய 876 ரூபாய் 38 சதம் பணத்தை, ‘டொக்டர் கலீல் மற்றும் பெரிய தலைவைர்களுடைய சம்மதத்துடன்’ இலங்கை முஸ்லிம் சகாய நிதிக்கு (Ceylon Muslim Scholarship fund) கொடுத்ததாக வரவு – செலவு கணக்குப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேற்படி குறிப்புப் புத்தகத்தில் – இவை தவிர்த்த வேறு பல நிகழ்வுகள் பற்றிய தகவல்களும் பதியப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, 1946ஆம் ஆண்டு இந்தியாவில் நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பதவியேற்ற போது, முஸ்லிம்கள் எடுத்த நிலைப்பாடு பற்றி – அந்த புத்தகத்தின் 33ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘1946 செப்டம்பர் 2, இன்று புது டில்லியில் பண்டித நேரு தலைமையில் இடைக்கால சர்க்கார் பதவி ஏற்றது. இன்றைய தினத்தை முஸ்லிம்கள் துக்க தினமாக கொண்டாடி, எங்கும் கறுப்புக் கொடி கட்டி, கிளர்ச்சி செய்தனர்‘ என எழுதப்பட்டுள்ளது.

அதே பக்கத்தில் இந்திய அரசியல் வரலாறு பற்றிய மற்றொரு தகவல் – பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. ‘1946 அக்டோபர். இன்றுதான் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் இடைக்கால சர்க்காரில் அதிகாரமேற்றனர்‘.

அந்தப் பக்கத்தில் இன்னுமொரு பதிவு இவ்வாறு உள்ளது, ‘1946 டிசம்பர் 6. தொகுதி சம்பந்தமாக காங்கிரசுக்கும் முஸ்லிம் லீகுக்குமிடையில் நடந்துவந்த வியாக்கியானத் தகராறை, லண்டனில் தலைவர்களை அழைத்துப் பேசி, ஜனாப் ஜின்னா சொல்வதுதான் சரியான வியாக்கியானமென்று, பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி தீர்ப்பளித்தது இன்றுதான்‘.

இப்படி இந்தக் குறிப்புப் புத்தகத்தில் இந்திய அரசியல் தொடர்பாகவே கணிசமாக எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments