எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு

🕔 January 16, 2024

டெங்கு நோயினால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை சுமர் 06 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி 2024 ஜனவரி 15 ஆம் திகதி வரை – நாடளாவிய ரீதியில் 5,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிக எண்ணிக்கையானவர்கள் மேல் மாகாணத்தில் (33.6%) பதிவாகியுள்ள அதே வேளையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 1,228 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1,956 ஆகும்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,177 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.

கடந்த வருடம், இலங்கையில் மொத்தம் 87,078 டெங்கு நோயாளர்கள் பதிவாகினர் அவர்களில் 57 பேர் உயிரிழந்ததாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் நேரடியாக மேற்பார்வை செய்யப்படும் செயற்பாட்டு பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு ஜனவரி 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தீர்மானம் எட்டப்பட்டது.

தற்போதைய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களுக்கான அறிக்கையிடல் அமைப்பை உருவாக்குதல், மாகாணத்தில் தினசரி முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டுதல் ஆகியவை இந்த பிரிவின் நோக்கமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்