சிறுபான்மை கட்சிகளும் பிழைப்பு அரசியலும்: அடுத்துவரும் தேர்தலில் என்ன நடக்கும்?

🕔 January 8, 2024

– சுஐப் எம்.காசிம் –

தேர்தலுக்கான ஆண்டு பிறந்துள்ளது. எனினும், முதலில் நடைபெறும் தேர்தல் எதுவென்பதில்தான் குழப்பங்கள். இதுகுறித்த ஊகங்களால் ஊடகங்கள் குழம்பியுள்ளன. அரசியல்வாதிகள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதாரத்தின் பிடியிலிருந்து மீளவும் எழமுயலும் தறுவாயில், இப்படியொரு தேர்தல் தேவையா? என்றும் சிலர் சிந்திக்கின்றனர்.

வலுத்துப்போயுள்ள அரசியல் போட்டி, வளைத்துப்பிடிக்க முயலும் ஆட்சி, அதிகார ஆசைகள் போன்றவை – இப்படிச் சிந்திப்போரை கண்டுகொள்ளவில்லை. தேர்தலே வேண்டுமென்ற பிடிவாதம் வலுத்து வருவதாலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு அழைப்பு விடுப்பாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள், காய்நகர்த்தல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராதுள்ள நிலையிலுங்கூட – ஜனாதிபதித் தேர்தலுக்கு துணிவாரா ரணில் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. பிரித்தாளும் காய்களை நகர்த்தும் ரணிலின் தந்திரங்கள் இம்முறை பெரிதாகக் கைகூடவில்லை. இதனால்தான், எந்தத் தேர்தலை நடத்தலாமென சிந்திக்கிறார்.

புத்தாண்டு தந்த அடுத்த குழப்பமாக சிறுபான்மைக் கட்சிகளின் தடுமாற்றங்கள் உள்ளன. தென்னிலங்கை களங்களை நோட்டமிடும் நுணுக்கம் இத்தலைமைகளுக்கு இல்லை. கடைசியாக நடந்த (2019) ஜனாதிபதித் தேர்தலிலும் இதுவே நிகழ்ந்தது. ராஜபக்ஷக்களை ஆதரிப்பதில்லை என்ற இறுமாப்பில் இத்தலைமைகள் செயற்பட்டதால் தென்னிலங்கையை நாடிபிடிப்பதில் தவறிழைத்தன.

ஊடகங்களின் அளவுக்கதிகமான கற்பனைகளால் இத்தலைமைகள் கவரப்பட்டிருக்கலாம். இதே தவறுகள் இம்முறையும் நடக்கக்கூடாதென்றே இந்தத் தலைமைகள் விரும்புகின்றன. அதிலும் முஸ்லிம் தலைமைகளுக்கே அதிக விருப்பம். சாதாரண நிலைமைகளிலேயே தேசிய நீரோட்டத்தையும், தென்னிலங்கைக் களங்களையும் நாடிபிடிக்கும் வல்லமை இல்லாத இத்தலைமைகள், இம்முறை நிலவும் சமபலம் அல்லது தெற்கின் மறைமுகமான களங்களையா கண்டறியப்போகின்றன? இதனால்தான், நாடாளுமன்றத் தேர்தலை இத்தலைமைகள் முதலில் விரும்புகின்றன.

இரண்டு ஆதாயங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புக்கள் தேர்தலை கோருகின்றன. ஒன்று, கட்சிக்கு துரோகம் இழைத்தோரை தோற்கடித்தல், ஏனையது ஜனாதிபதித் தேர்தலில் கூட்டுச்சேர்வதற்கான தேசியக் கட்சியை அடையாளங்காணல்.

முஸ்லிம் தலைமைகள் விரும்புவதைப்போல பொதுத் தேர்தல் நடந்தால் இத்தலைமைகள்  போட்டியிடுவது எப்படி? தென்னிலங்கையில் சஜித்தின் செல்வாக்கை நம்பிக் களமிறங்குமா? அல்லது தனித்துவம் காப்பதற்காக தனித்துப் போட்டியிடத் துணியுமா?

கூட்டு வைக்கப்போகும் தேசியக் கட்சி – நிறைவேற்று அதிகாரத்தைக் கைப்பற்றுமா? என்ற சந்தேகம் உள்ள நிலையில், தனித்துக் களமிறங்குவதுதான் சிறந்தது. ஆனால், தனியாகச் சென்று எத்தனை ஆசனங்களை வெல்வது? முஸ்லிம் தலைமைகளுக்குள் நிலவும் போட்டிகளை விடவும் கட்சிக்குத் துரோகமிழைத்தோரை தோற்கடிக்கும் வியூகங்களே இத்தேர்தலில் பிரதானமாகப்போகின்றன.

இக்கட்சிகளைப் பொறுத்தவரையில் சகல தலைமைகளுக்கும் இவ்வியூகம் அவசியப்படுகிறது. எனவே, இவ்வியூகங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டால், முஸ்லிம் கட்சிகளின் பொதுக்கூட்டணியை அமைப்பதற்கும்  வழிதிறக்கலாம். இவ்வாறான ஒரு கூட்டு, கட்சிகளின் விசுவாசத்தை விலை பேசியோருக்கு  கட்டாயம் சங்கடத்தையே ஏற்படுத்தும்.

பொதுவான ஜனாதிபதி வேட்பாளரைப் பற்றி தமிழர் தரப்பு சிந்திக்கையில், பொதுத் தேர்தலில் பொதுவான கூட்டணி பற்றியாவது முஸ்லிம் தலைமைகள் சிந்திப்பதே சிறந்தது.

புதிதாகத் தெரிவாகும் எம்.பிக்கள் கட்சியின் விசுவாசத்தை பாதுகாப்பதற்கான பயிற்சிக் களமாகவும் இப்பொதுக்கூட்டு அமையலாம். மற்றும் ஜனாதிபதியாக போட்டியிடவுள்ளவருக்கு நிபந்தனை விதிக்கவும் இப்பலம் பயன்படலாம்.

ஆனால், எதிரியின் எதிரி நண்பனென்ற நிலைமைகளே உள்ளன. ராஜபக்ஷக்களின் மொட்டுக்கு முட்டுக்கொடுக்கும் ரணிலின் அரசியலால்  இக்கட்சிகளுக்கு ஏற்பட்ட திண்டாட்டமே இது. முதலில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் இத்திண்டாட்டம் அதிகரித்து தலைமைகளைத் திணறடிக்கும். இதனால், கட்சிகளுக்குள் பல பிளவுகள் ஏற்பட்டு ரணிலுக்கு வாசியாகவும் அமையும். இந்தப் பிளவுகளில் கச்சிதமாக காய்நகர்த்துவோரே அரசியலில் பிழைப்பர்.

எனவே, பிழைப்பு அரசியலை கைவிடும் வரைக்கும் சில பிழையான கணிப்பீடுகள் இருக்கவே செய்யும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்