ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

🕔 January 2, 2024

மாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் – அரூரி உள்ளிட்ட சிலர், இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

லெபனான் – பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இன்று (02) நடத்தப்பட்ட தாக்குதலில் அல் – அரூரி கொல்லப்பட்டார்.

“பெய்ரூட்டில் நடந்த துரோக சியோனிச வான்வழித் தாக்குதலில் சலே அல்-அரூரி வீரமரணம் அடைந்தார்” என்று ஹமாஸ் ஊடகமான அல் அக்ஸா டிவி தெரிவித்தது.

ஆளில்லா விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹமாஸின் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியை (Izz ad-Din al-Qassam Brigades) உருவாக்கியவர்களில் அரூரியும் ஒருவராவார்.

பெய்ரூட் புறநகர்ப் பகுதியான அல்-முஷ்ரிஃபிய்யிலுள்ள ஹமாஸுக்குச் சொந்தமான அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் – குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் செய்தி நிறுவனமான என்என்ஏ தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான அரூராவில் உள்ள அல் – அரூரியின் வீட்டை கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலிய ராணுவம் இடித்தது.

இந்த நிலையில், பெய்ரூட்டில் அல்-அரூரி மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டமை குறித்து தமது நாட்டு அமைச்சர்கள் எந்தப் பேட்டியும் கொடுக்கக் கூடாது என்று, இஸ்ரேலின் அமைச்சரவைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலின் அருட்ஸ் ஷேவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சலே அல் – அரூரி கொல்லப்பட்டமை – இஸ்ரேலிய பிரதமருக்கு மிகவும் தேவையான வெற்றி என்று, இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் அகிவா எல்டார் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.

ரமல்லாவுக்கு வடக்கே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில், சலே அல்-அரூரியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரமல்லாவில் நாளை புதன்கிழமை பொது வேலைநிறுத்தத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்