தந்தையின் கட்சியிலிருந்து விலகினார் மகன்; சக்கி அதாஉல்லா எடுத்த அதிரடி முடிவு: பின்னணி என்ன?
– மரைக்கார் –
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் அஹமட் சக்கி , தனது தந்தை – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.
தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு 30.12.2023 திகதியிட்டு அஹமட் சக்கி எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில்; தேசிய காங்கிரஸில் தான் வகிக்கும் உதவிச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ள அஹமட் சக்கி, ‘இன்றிலிருந்து தேசிய காங்கிரஸின் உதவி செயலாளர் நாயகம் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்ளவதற்கான கடிதத்தினை – தேசிய காங்கிரஸின் தலைமையிடம் ஒப்படைத்து விட்டேன்’ என்றும், ‘இதுவும் ஒரு வகை அனுபவம்தான்’ எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தனது தந்தையின் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணங்கள் எதனையும் – அஹமட் சக்கி தனது ராஜிநாமா கடிதத்திலோ, அல்லது அவரின் ‘பேஸ்புக்’ பதிவிலோ வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக தேசிய காங்கிரஸ் சார்பில் இரண்டு தடவை அஹமட் சக்கி பதவி வகித்திருந்தார். மேலும் கடந்த முறை அக்கரைப்பற்று மாநகர சபைக்கென அறிவிக்கப்பட்ட தேர்தலிலும் – தேசிய காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுவில் அஹமட் சக்கி வேட்பாளராக குறிப்பிடப்பட்டிருந்தார்.
தனது மகன் அஹமட் சக்கியை அரசியலுக்குள் கொண்டு வருவதற்காகவும், அவரை அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக்குவதற்காகவும், தனது கட்சியிலிருந்த மிக முக்கியஸ்தர்கள் சிலருடன் அதாஉல்லா முரண்பட்டதும், அதனால் சிலர் கட்சியை விட்டு வெளியேறியமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இவ்வாறான பின்னணியில்தான் அகமட் சக்கி, தனது தந்தையின் கட்சியை விட்டும் வெளியேறியுள்ளார்.
இந்த வெளியேற்றத்துடன் அரசியலுக்கு முற்று முழுதாகவே சக்கி விடைகொடுக்கக் கூடும் என, விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னாள் மேயர் அஹமட் சக்கியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சில சம்பவங்களே, தற்போது எடுத்துள்ள அரசியல் முடிவுக்கு காரணம் என அறிய முடிகிறது.