பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றுவதைத் தடுக்குமாறு உத்ரவிடக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரியும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி மனுக்களை பேராயர் மெல்கம் ரஞ்சித், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘அரகலய’ போராட்டக்காரர் ஒருவர் மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்துள்ளனர்.
தென்னகோன் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் – ஈஸ்டர் தாக்குதல் மற்றும் ‘அரகலய’ என அழைக்கப்படும் போராட்டம் மீதான தாக்குதலின் போது, அவர் தனது கடமைகளை புறக்கணித்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு வாய்ந்த பொலிஸ் மா அதிபர் பதவியை, தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மாறாக, அடிப்படை விதிகளை மீறி செயல்படும் ஒருவருக்கு வழங்குவதற்குப் பதிலாக, மனிதாபிமான குணம் கொண்ட ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.