‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ செயற்பாட்டின் போது, ஏதேனும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் நிவாரண நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னறிவிப்பின்றி பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“பொலிஸார் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களென்றால், அது அவர்களின் இலக்குகள் பற்றிய கணிசமான தகவல்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. அல்லது நீண்டகால சட்ட விரோத செயல்களுக்குத் தீர்வு காணும் அதிகாரம் அவர்களிடம் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசேட நடவடிக்கையின் போது பொதுமக்கள் எதிர்கொண்ட சவால்களை ஏற்றுக்கொண்ட அவர், சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இரையாகாத சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கை தொடர்கிறது என்றும் கூறினார்.
சட்டத்தை நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் கடமையை எடுத்துக்காட்டிய அவர், இந்த பொறுப்பு காலதாமதமாக தீர்க்கப்பட்டதால், பெரிய அளவிலான நடவடிக்கை தேவைப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், மக்களின் கூட்டு நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.