யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா

🕔 December 20, 2023

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி செயற்பாடுகள் அனுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ”வன வளத்தைப் பாதுகாப்பதே வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாகும். நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர், திணைக்களத்தின் செயற்பாடுகள் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய வனப் பகுதிகளை அண்மித்து வாழும் மக்களின் பாதுகாப்புக்கன உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

மக்களின் வாழ்வாதாரத்துக்கு வன வளம் வழிவகுப்பதாக அமையும் பட்சத்தில் வனத்தை மக்கள் பாதுகாப்பர். வனப் பகுதிகளின் எல்லையில் வாழும் மக்கள், வனத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய மூலப்பொருட்கள் பல உள்ளன. வனப்பகுதிகளை அண்மித்து வாழ்வோருக்கு மேற்படி மூலப்பொருட்களைத் தேடுவதற்கான அனுமதியை வழங்கும் பட்சத்தில், அவர்களால் வனங்களும் பாதுகாக்கப்படும். பசுமை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் வலுப்படும். சுற்றுச்சூழலில் இருக்கும் மூலப்பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் பெருமளவான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியும்.

அதனால் மாற்றுச் சிந்தனைகளுடன் செயற்பட எதிர்பார்க்கிறோம். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29% ஆக காணப்படும் வனங்களைக் கொண்டு – முழுமையாக பயனடைவதற்கும், பாதிக்கப்பட்ட வனங்களின் பாதுகாப்புக்காக புதிய மரங்களை நடவும் நடவடிக்கை எடுப்போம். நாட்டிலுள்ள வன வளத்தை மேம்படுத்தும் வகையில் அதற்கு அவசியமான மரக் கன்றுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

வீதிகளின் இரு மருங்கிலும் மரங்களை நடுவதற்கு அவசியமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்துக்கு அவசியமான மரக் கன்றுகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

எமது அமைச்சு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 135% லாபத்தை ஈட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் 1670 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியிருந்த நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 4700 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

யானை – மனித மோதல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த சிறிய நாட்டில் மக்கள் தொகையை போன்றே யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு நீர்பாசான வேலைத்திட்டங்கள் யானைகளின்பாதைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன. மக்களின் விவசாயச் செயற்பாடுகளும் யானைகளின் பாதைகளை பாதிக்கின்றன. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவைத் தடுப்பதற்கு அடுத்த வருடத்தில் ஆயிரம் கிலோ மீற்றர் யானை தடுப்பு வேலிகளை அமைக்க எதிர்பார்க்கிறோம்.

பல்துறை அபிவிருத்தி திணைக்களத்திலுள்ள 4000 பேரை – நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொணடு, யானை வேலிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்த திட்டம் சாத்தியப்படும் பட்சத்தில், யானை – மனித மோதலுக்கு குறிப்பிடத்தக்க தீர்வைக் காண முடியும் என எதிர்பார்க்கிறோம்.

யானைகளின் பாதுகாப்புக்காக இதுபோன்ற பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதேபோல் யானைகளின் நடமாட்டமுள்ள வீதிகளில் காணப்படும் மக்களின் குடியிருப்புக்களுக்கு மாறான மாற்று இடங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் டிரோன் விமானங்கள் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடித் திட்டங்கள் அனுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்