பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
– பாறுக் ஷிஹான் –
பாடசாலை மாணவர்கள் இவருவர் உட்பட போதைப்பொருள் சந்தேக நபர்கள் 10 பேரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர்.
விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சீருடை மற்றும் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழு – திங்கள்(18) முதல் புதன்கிழமை (20) வரையான 03 நாட்களில் 10 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையிலான குழு – சந்தேக நபர்களை கைது செய்தது.
கைதானோரிடம் இருந்து நாட்டு கஞ்சா, ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (20) புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையில், ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவரை இப்பொலிஸ் குழுவினர் கைது செய்தனர். தரம் 09 மற்றும் தரம் 11இல் கல்வி கற்கும் இம்மாணவர்கள் மாவடிப்பள்ளி பகுதியில் பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.
மேலும் சாய்ந்தமருது பகுதியில் பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்பு பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த 5 சந்தேக நபர்களும் இத்தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.