தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

🕔 December 18, 2023

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா, தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ (Immune Globulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டார்.

ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்ததை அடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அரச உயர் அதிகாரிகள் இருவரின் துணையுடன் போலி ஆவணங்களை உருவாக்கி இந்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மருந்து நிறுவனமொன்றின் உரிமையாளராக ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுதத் ஜானக பெனாண்டோ, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் விஜித் குணசேகர மற்றும் சுகாதார அமைச்சின் வழங்கல் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க ஆகியோர் இந்த மோசடியான இறக்குமதியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்