ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா?

🕔 December 18, 2023

– ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர், தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர்) –

லங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of Srilanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது.

இதில் ‘தமிழன் ‘ பத்திரிகைக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. விருதுகள் கிடைக்காவிடினும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. ஏனெனில் மக்கள் அங்கீகாரம் எங்களுக்குண்டு.

ஆனால் இந்த விருது வழங்கும் நிகழ்வைப்பற்றியோ அதிலிலுள்ள ஏகபோக ஏகாதிபத்தியம் பற்றியோ எவரும் பேசுவதில்லை – பேசத் துணிவதில்லை.

இந்த நிகழ்வில் தமிழ் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. தமிழில் ஒரு நிகழ்ச்சி கூட இல்லை. விருது பெற்ற பலர் மேடைக்கு அழைக்கப்படவில்லை. வாழ்நாள் சாதனையாளர்கள் விருது என்று அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக, அதற்காக தெரிவு செய்யப்பட்ட ஐவரும் மேடைக்கு அழைக்கப்படாமல் கீழேயே வைத்து கௌரவிக்கப்பட்டனர்.

சமூகத்துக்கு வழிகாட்டியல்லாத ஒருவனை கௌரவித்தால் – அந்த சமூகம் அவன் வழிகாட்டலில் வீணாய்ப்போகும். எனவே ‘விருது’ என்பது நடுவர்களால் ஆராயப்பட்டு வழங்கப்படுதல் வேண்டும். அதுவும் ஊடகத்துறைக்கு வழங்கும்போது மிகவும் கவனமாக செய்யவேண்டும்.

ஆனால் மேற்படி ஊடக விருது வழங்கும் செயற்பாடு அப்படியல்ல. ஊடகர்கள் தாங்களாக விண்ணப்பிக்க வேண்டும். ‘ நானும் ரவுடிதான்’ என்பதுபோல ஆக்கங்களை அனுப்பவேண்டும். அப்படி விண்ணப்பிக்காதவர்கள் சிறந்த ஊடகர்கள் அல்லவென கருதப்படுகிறது போலும்.

தமிழ் அச்சு ஊடகங்களில் சிறந்தவரை தெரிவு செய்யும்போது, முதல் ஆண்டில் அனைத்து தமிழ் பத்திரிகைகளையும் நடுவர்கள் தொடர்ந்து வாசித்து – யார் நல்ல செய்திகளை, அரசியல் கட்டுரைகளை தருகிறாரோ அவரைத் தெரிவு செய்யவேண்டும். அதுதான் தர்மம்.

ஆனால் இங்கே அப்படியல்ல. பத்திரிகைகளுக்காக விருது வழங்கும் குழாமில் இருக்கும் சில தேர்வாளர்களுக்கு மீடியா பற்றிய அறிவு இல்லை ( எல்லோரும் அல்ல ). அவர்கள் சில பல காரணங்களுக்காக – நல்ல ஊடகர்களை ஒதுக்கிவிட்டு தங்களது எதிர்காலத்தை வளப்படுத்தும் வேலைகளை பார்க்கின்றனர்.

‘சுடர் ஒளி’ பத்திரிகையில் நாங்கள் பணி புரிந்தபோது எங்களை ‘புலிப் பத்திரிகை’ என்றார்கள். அப்போது நாங்கள் இதற்கு விண்ணப்பிக்க விரும்பவுமில்லை. இப்போதும் நாங்கள் விண்ணப்பிக்க விருப்பமில்லாமல் தான் இருந்தோம். சிலசமயம், அப்படி விண்ணப்பிக்காவிடின், ‘நீங்கள் விண்ணப்பித்திருந்தால் விருது கிடைத்திருக்கும்’ என்று ஒரு சாட்டுச் சொல்வார்கள். சரி போகட்டும் விண்ணப்பிப்போம் என்று எமது குழுவினர் அனுப்பினர்.

கடந்த வருடம் எக்கச்சக்கமான அரசியல் செய்திகளை முன்கூட்டியே முதலில் வழங்கிய பத்திரிகை நாங்கள். அரசியல் கட்டுரைகளை வழங்கியவர்கள் நாங்கள். சிறந்த பத்திகளை வழங்கியவர்கள் நாங்கள். வாசகர்கள் அதற்கு சான்று பகிர்வார்கள். ஆனால் எங்களை அவர்கள் பரிசீலிக்கவில்லை.

அப்படி எங்களுக்கு அந்தஸ்து வழங்கினால், ஏற்கனவே வீழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ‘அவர்கள்’ மேலும் அதலபாதாளத்தில் விழ வேண்டிவந்துவிடும் என்ற நியாயமான காரணங்கள் ‘அவர்கள்’ பக்கம் இருக்கக் கூடும்.

அது மட்டுமல்ல, ‘எங்கள் பத்திரிகைக்கு எழுதினார்கள்’ என்று, தகுதியான பலருக்கு விருது மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பிராந்திய செய்தியாளர்கள் பலர் எழுதிய ஆக்கபூர்வமான கட்டுரைகள் குப்பையில் போடப்பட்டன. வடக்கு – கிழக்கில் இருக்கும் ‘ஜெர்னலிஸ்ட்’மார் கண்டுகொள்ளப்படவேயில்லை..

மேற்படி நிகழ்வில் விருது பெற்ற தமிழ் ஊடகர்கள் ஓரிருவரைத் தவிர, இதர பலரை மேடையில் ஏற்றி அவர்கள் எழுதிய விடயத்தைப் பற்றி 5 நிமிடங்கள் பேசச் சொன்னால் வண்டவாளம் தெரியும். ‘ஊடக விருது’ என்ற பெயரில் சுயதம்பட்டம், இமேஜை ஏற்றும் வேலைகள் செய்யப்படும் பரிதாப நிலை.

ஊடக விருது வழங்கும் நிகழ்வு ஒரவஞ்சனையானது என்றுகூறி, எவராவது நீதிமன்றம் சென்றால் அனைத்து விருதுகளையும் மீளப்பெறவேண்டிய நிலை வரும்.

1. எந்த அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன?

2. அவற்றுக்கான எடுகோள்கள் என்ன ?

3. இந்த விருதை பெறத் தகுதியானவர் ஏனைய ஊடகங்களில் இல்லையா ?

4. விருதுகளை வழங்கத் தகுதியான ஆக்கங்களை பரிசீலிக்க நடுவர்களுக்கு இருக்கும் தகுதிகள் என்ன?

இந்த கேள்விகளை நீதிமன்றம் கேட்டாலே போதும். பல ஊடகர்கள் இதனால் உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்களாயின் அவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் நேரிடலாம்.

ஊடகத்துறை சமூகத்துக்கு வழிகாட்டி. ஆனால் அவர்களுக்குள் இந்தளவு வெட்டுக்குத்து. ஏன் இந்தப் பிழைப்பு ?

எங்களுக்கு இரண்டு விருதுகளை தந்து எங்களின் வாயை மூட முயற்சிக்கலாம். அதற்கு நாங்கள் ஆளில்லை.

ஆனால் விருதுகளுக்கு ஆக்கங்களை அனுப்பிய எத்தனையோ தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அது நியாயமற்ற செயல் என்பது எனது வாதம்.

எத்தனையோ பிராந்திய செய்தியாளர்கள், இங்கே தலைமை அலுவலக செய்தியாளர்களை விட திறமையானவர்களாக இருக்கிறார்கள். பிராந்திய செய்தியாளர்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக – அவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். வடக்கில் அத்தனை தமிழ் பத்திரிகைகள், தவிர ஈ பேப்பராக வரும் ஊடகங்கள் தரமான செய்திகளை தரவில்லையா ?

‘ஊடக விருதுகள்’ என்ற கட்டப்பஞ்சாயத்தை நடத்தி – உங்களுக்கு ஏற்றவாறு தீர்ப்பை எழுதிக்கொள்வது உங்களை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லாது. மேலும் வீழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்லும்.

இதுவரை விருது பெறாத என் இனிய தமிழ் ஊடகர்களே… ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள். அலுவலகத்திலும் இப்படித்தான் உங்களை ஓரத்தில் உட்கார வைத்திருப்பார்கள், சளைக்காதீர்கள்.

உங்களுக்கும் நேரம், காலம் – வரும். அப்போது யாரும் உங்களை தடுத்துவிட முடியாது.

விருந்துக்காக அலையும் ஊடகர்கள், ஊடக நிறுவனங்கள் மத்தியில் விருதை எதிர்பார்க்காதீர்கள்.

இதை கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதாக எவரும் நினைக்கக் கூடும்; ஆம் அதுதான் உண்மை.

(‘புதிது’ ஆசியர் குறிப்பு: மேற்படி ஊடக விருதை வழங்கும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவராக – வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன் பதவி வகிக்கின்றார். இம்முறை வீரகேசரி பத்திரிகை நிறுவனத்துக்கு 11 ‘ஊடக விருது’கள் வழங்கப்பட்டுள்ளன)

விருதுகளைப் பெற்ற – தனது வீரகேசரி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோருடன் குமார் நடேசன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்