ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

🕔 December 12, 2023

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் – போதைப்பொருள்களுக்குத் தடை விதித்த பின்னர், ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் செய்கை 95 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து மியான்மார் ஓப்பியத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது. அங்கு 2021 ஆட்சிக் கவிழ்ப்பால் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை – பலரையும் ஓப்பியம் செய்கைக்குத் தள்ளியது என, பொதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா அலுவலகம் இன்று செவ்வாய்கிழமை குறிப்பிட்டுள்ளது.

மியான்மார் விவசாயிகள் இப்போது ஓப்பியம் செய்கையில் இருந்து சுமார் 75 சதவீதத்துக்கும் அதிகம் சம்பாதிக்கின்றனர். ஓப்பியம் பொப்பி பூவின் சராசரி விலை ஒரு கிலோகிராம் 355 அமெரிக்க டொலரை (இலங்கை பெறுமதியில் 01 லட்சத்து 9657 ரூபா) எட்டியுள்ளது.

2022 முதல் 2023 வரை, மியான்மரில் சட்டவிரோத பயிர்களை வளர்க்கப் பயன்படுத்தப்பட்ட நிலத்தின் அளவு 18 சதவீதம் அதிகரித்தது. அதாவது, 40,100 முதல் 47,000 ஹெக்டேயர் (99,000 முதல் 116,000 ஏக்கர்) வரை அதிகரித்துள்ளது.

மியான்மாரில் நிலவும் வன்முறை அரசியல் கொந்தளிப்பு, ஓப்பியம் உற்பத்தி அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளது.

‘தென்கிழக்கு ஆசியாவில் ஓப்பியம் செய்கையானது – வறுமை, அரசாங்க சேவைகளின் பற்றாக்குறை, சவாலான பொருளாதார சூழல்கள், உறுதியற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது’ என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய ஓப்பியம் உற்பத்தி நாடாக ஆப்கானிஸ்தான் இருந்தது. 2021 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் – சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியை நிறுத்துவதாக உறுதியளித்த பின்னர் பொப்பி செய்கை அங்கு வீழ்ச்சியடைந்தது.

‘அபின்’ எனும் போதைப் பொருள் – ஓப்பியம் பொப்பியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்