இருக்கும் விமான நிலையத்தை புனரமைப்புச் செய்யாமல், நான்காவது விமான நிலையம் தேவையா: சாணக்கியன் கேள்வி

🕔 December 9, 2023

னாதிபதி 04 வது சர்வதேச விமான நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது தேவையான ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு முன்னர் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பலாலி வடக்குப் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்கும், விமான ஓடு பாதையினை முறையாக அமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சாணக்கியன் நாடாளுமன்றில் நேற்று (08) தெரிவித்தார்.

“அவர் மேலும் கூறுகையில்;

பலாலி விமான நிலையம் புனரமைப்பு செய்ய வேண்டியுள்ள போதிலும், அதைப் பற்றி சிந்திக்காமல் மற்றுமொரு புதிய விமான நிலையத்தினை அமைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வடக்கில் புனரமைப்பு செய்வதற்குரிய இடங்கள் காணப்பபடும் போது -எதற்காக புதியனவற்றை அமைக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பல்வேறுபட்ட இடங்களிலும் 45 இருக்கைகளையுடைய விமானங்கள் தரை இறங்கக் கூடிய வசதிகள் உள்ளன. ஆகவே தனியார் கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்ற போது, மட்டக்களப்பு – கொழும்பு, கொழும்பு – கனடா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும்.

ஆகவே இது போன்ற விடயங்களை மேற்கொள்ளாமல் நான்காவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேசுவது நேரத்தினை வீணடிக்கும் ஒரு விடயம். அத்துடன் எங்களது பிரதேசத்தைப் பற்றி கவனம் செலுத்த தவறிவிட்டீர்கள் என்றே நாங்கள் எண்ணக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவுக்கு ஆரம்பித்த பாதையானது 56 கடல் மைல்களாக காணப்படுகின்றது. இதனால் நேரமும், செலவும் அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் இப் பாதையினைப் பயன்படுத்துவார்களா என்பது தெரியாது. தலைமன்னார் – ராமேஸ்வரம் பாதையானது 18 கடல் மைல்களாக உள்ளதால் 01 மணித்தியாலத்தில் சென்றடையக் கூடியதாகவும், செலவும் குறைவாக உள்ளது.

அதனால் மக்கள் கூடதலாக அப்பாதையினை பாவிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இது தொடர்பாக ஆராய வேண்டும். மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். விரைவில் இப் பாதையினை திறப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அத்துடன் திருகோணமலையிலுள்ள துறைமுகமும் எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் உள்ளது. எனவே இதற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்