கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

🕔 December 8, 2023

லி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று – கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனைக் கூறினார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்;

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்றவுடன் புதிய அமைச்சரவை நியமனத்துக்காக 2020.08.11ஆம் திகதி கண்டிக்குச் சென்று – இரவு அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தோம். நான், விமல் வீரவன்ச, டலஸ் அழகபெரும, மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் அறையில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கோட்டாபய ராஜபக்ஷ எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, ‘உதய, அலி சப்ரிக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

நீங்கள் அலி சப்ரியுடன் பேசுங்கள். அவர் இணக்கம் தெரிவித்தால், கைத்தொழில் அமைச்சை அவருக்கு வழங்கலாம், நீதியமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்கலாம்’ என்றார்.

நான் இவ்விடயம் தொடர்பில் அலி சப்ரியிடம் அப்போதே பேசினேன். அதற்கு அவர் ‘நான் அரசியல்வாதி அல்ல – கிடைக்கும் அனைத்து அமைச்சு பதவிகளையும் வகிப்பதற்கு. நீதித்துறையில் சேவையாற்றியுள்ளேன். ஆகவே நீதிக்கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பல உள்ளன. அதனால் தான் நீதியமைச்சர் பதவிக்கு இணக்கம் தெரிவித்தேன். அமைச்சர் பதவி இல்லை என்றால் – நான் முரண்படப் போவதில்லை. அமைச்சு இல்லை என்றால் இப்போது கொழும்புக்கு செல்கிறேன். பிரச்சினை இல்லை’ என்றார்.

இதன் பின்னர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நான் தொலைபேசி அழைப்பை எடுத்து ‘அமைச்சரவையில் வேறு முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளார்களா என்று வினவினேன். அதற்கு அவர் இல்லை  என்றார். அவ்வாறாயின் நீதியமைச்சராக அலி சப்ரியை நியமியுங்கள். அவர் இனவாதியோ, மோசடியாளரோ அல்ல. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அவர் தலையிடமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகவே அவரை நீதியமைச்சராக நியமியுங்கள். சிங்கள சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தால் அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்’ என்றேன். இதன் பின்னரே அவர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டார்” என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி; “உண்மையை நீங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் இனத்தையோ, மதத்தையோ அடிப்படையாக கொண்டு அரசியலில் ஈடுபடவில்லை.

ஒட்டுமொத்த மக்களுக்காகவே அமைச்சர் பதவியை வகிக்கிறேன். இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படுகிறேன். நாட்டுக்கு எதிராக எந்நிலையிலும் செயற்படமாட்டேன். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் பதவி துறப்பேன்” என தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்