இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு

🕔 December 7, 2023
அட்டாளைச்சேனை வைத்தியசாலை

– முன்ஸிப் அஹமட் –

ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் இன்று (07) காலை 8.00 மணி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்துள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றிருந்தும், அவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக பணியாற்றி வருதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கிணங்க செயற்படுமாறு வலியுறுத்தும் வகையிலும், இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க தரப்பு தெரிவிக்கின்றது.

கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வரும் டொக்டர் றிபாஸுக்கு, ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அம்பாறைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில், அவரின் இடத்துக்கு டொக்டர் சஹீலா இஸ்ஸடீன் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆயினும் தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு இணங்க நடந்து கொள்ளாமலும், பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டொக்டர் சஹீலாவிடம் தனது பொறுப்புக்களை ஒப்படைக்காமலும் டொக்டர் றிபாஸ் இழுத்தடிப்பு செய்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தரப்பு கூறுகிறது.

இந்த நிலையில், வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு அமைய இன்றைய தினம் (07) உடனடியாகச் செயற்படுமாறு தெரிவித்து, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமிருந்து டொக்டர் றிபாஸுக்கு எழுத்து மூல உத்தரவு நேற்று வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியிலேயே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திலிருந்து டொக்டர் றிபாஸ் உடனடியாக வெளியேற வேண்டுமெனக் கோரி, இன்றைய தினம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நோயாளர்கள் சங்கடங்களை எதிர்நோக்கி வருவதாக அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்