தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி

🕔 December 6, 2023
எம்.எஸ்.லங்கா நிறுவனத்துக்கு அரச உயர் அதிகாரிகள் வருகை தந்து, நிலைமையை ஆராய்ந்தனர்

– நூறுல் ஹுதா உமர் –

க்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸின் ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும், அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது என, அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தமையினை அடுத்து – எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கான இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். லங்கா நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றக் குழுவில் தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முறையிட்டதாகவும், அதனையடுத்து அந் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எம். சபீஸ் – ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

எம்.எஸ். லங்கா நிறுவனத்தை மூடவேண்டுமெனும் முயற்சியை பல வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா மேற்கொண்டு வந்ததாகவும், அதற்காக அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் போன்ற தனது பதவிகளை அவர் பயன்படுத்தியதாகவும் சபீஸ் கூறியிருந்தார்.

இந்த முயற்சிகள் எவையும் சாத்தியப்படாத நிலையிலேயே நாடாளுமன்ற குழுவிடம் எம்.எஸ். லங்காவுக்கு எதிராக அதாஉல்லா முறைப்பாடு செய்தார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள குறித்த நிறுவனம் இடைநிறுத்தப்பட்டமையை அடுத்து, உயர் மட்ட அரச அதிகாரிகள் – அங்கு அண்மையில் சென்று ஆராய்ந்தனர்.

அதன் அடிப்படையில் எம்.எஸ். லங்கா நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும் அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது எனவும், அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் அரச அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

தொடர்பான செய்தி: அதாஉல்லாவின் முறைப்பாட்டை அடுத்து, இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு அதிகாரிகள் விஜயம்: விடயங்களை தெளிவுபடுத்தினார் சபீஸ்

Comments