பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம்

🕔 November 29, 2023

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் – பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) முதல் மூன்று மாத காலத்துக்கு – இந்த நியமனம் அமுலுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் அந்தப் பதவி தொடர்பில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஓய்வு பெற இருந்த போதிலும், அவர் பல தடவை பதவி நீட்டிப்புகளைப் பெற்றிருந்தார்.

எனினும், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அரசுக்கு அறிவித்தார். அதற்கிணங்க, அவருக்கான பதவி முடிவடைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்பான செய்தி: புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

Comments