72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார்

🕔 November 28, 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

டப்பதற்கே அநேகமானோர் சிரமப்படக்கூடிய முதுமையில், இலங்கையின் முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச அளவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023’ (Masters Athletics Championships – 2023) விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என, மூன்று பதக்கங்களை வென்றுள்ளார் எஸ். அகிலத் திருநாயகி.

அவரின் உத்வேகமளிக்கும் கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்ற அகிலத் திருநாயகி, 800 மீட்டர் பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். 5,000 மீட்டர் நடத்தல் போட்டியில் நான்காம் இடம் கிடைத்துள்ளது.

70 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் இவர் பங்கேற்று இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை, ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்’ பிலிப்பைன்ஸில் நடைபெற்றன. இதில் இலங்கையிலிருந்து 145 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் மொத்தம் 22 நாடுகள் கலந்து கொண்டன. இவற்றில் இந்தியா 70 தங்கப் பதக்கங்களைப் பெற்று (மொத்தம் 215 பதக்கங்கள்) முதலாமிடத்தினையும், ஜப்பான் 58 தங்கப் பதங்கங்களைப் பெற்று (மொத்தம் 101 பதக்கங்கள்) இரண்டாமிடத்தினையும், பிலிப்பைன்ஸ் 42 தங்கப் பதக்கங்களைப் பெற்று (மொத்தம் 116 பதக்கங்கள்) மூன்றாமிடத்தையும் பெற்றன.

25 தங்கப் பதக்கங்களைப் பெற்ற (மொத்தமாக 87 பதக்கங்கள்) இலங்கைக்கு 8-வது இடம் கிடைத்தது.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அகிலத் திருநாயகி

1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி பிறந்தார் அகிலத் திருநாயகி. வீட்டில் இவர் கடைசிப் பிள்ளை. இவருக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருக்கின்றனர்.

தனது 24 வயதில் சிறைச்சாலை பாதுகாவலர் பணியில் சேர்ந்தார். பின்னர் சிறைச்சாலை மேற்பார்வையாளராகப் பதவி உயர்வடைந்து 36 வருடங்கள் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார்.

கல்விப் பொதுத் தராதரத்தில் உயர்தரம் (13-ஆம் வகுப்பு) வரை தான் படித்துள்ளதாக அகிலத் திருநாயகி கூறுகிறார்.

“சிறைச்சாலைக் காவலராக 1975-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது அம்மாவுக்கு அப்படியொரு பணியில் நான் சேர்வது பிடிக்கவில்லை. பின்னர் அம்மாவுக்கு எங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த ஐயா ஒருவர் ‘எந்தத் தொழிலையும் பெண்கள் செய்ய முடியும்’ எனக் கூறி, நம்பிக்கை ஏற்படுத்தியதால், அம்மா சம்மதித்தார்,” என்றார்.

சிறைக் காவலர் பணியில் இணைந்த பின்னரே இவருக்குத் திருமணமானது. கணவர் விமான நிலையத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கின்றார். ஒரு மகன், ஒரு மகள் என, இவருக்கு இரண்டு பிள்ளைகள். இவருவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கின்றார்கள்.

“பாடசாலைக் காலத்திலேயே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபடுவேன்,” என பிபிசி தமிழிடம் அகிலத் திருநாயகி தெரிவித்தார்.

பொதுவாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

“நாட்டிலுள்ள சிறைச்சாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அவற்றில் நான் கலந்துகொண்டு சிறந்த வீராங்கணையாகவும் தெரிவாகியிருக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு தனது விளையாட்டுத் திறமையினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த அகிலத் திருநாயகி, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

சாதாரணமாக 72 வயதில் கணிசமானோருக்கு பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்கின்றன. மூப்பு காரணமாக வலிமையை இழந்தும், ஆரோக்கியம் இல்லாமலும் அவர்கள் அவதியுறுவதை காண்கிறோம். ஆனால், திருநாயகி 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வதேச ரீதியாகக் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அகிலத் திருநாயகி

அவரது ஆரோக்கியத்துக்கான பிரதான காரணம் என்ன, என அவரிடம் கேட்டோம்.

“நான் சாப்பிட்ட பின்னர் சோர்வாக அல்லது ஓய்வாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது. சாப்பிட்டவுடன் எனது வேலைகளைத் தொடங்கி விடுவேன். கடமைக் காலத்தில் சைக்கிளில்தான் பயணிப்பேன். இப்போதும் சைக்கிள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன்,” என அவர் பதிலளித்தார்.

தினமும் காலை 5 மணிக்கு விழிப்பதை இன்னும் வழக்கமாகக் கொண்டுள்ளார் அகிலத் திருநாயகி. “எந்த உணவு என்றாலும் அதிகமாக சாப்பிட மாட்டேன்,” என்கிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை முறைமை குறித்துப் பேசும் போது “அதிகமாக விரதமிருப்பேன்,” எனத் தெரிவித்தார். இவர் சைவ உணவுகளை மட்டுமே உண்பவர். தனது வாழ்வில் ஒருபோதும் அசைவ உணவுகளைச் சாட்பிட்டதில்லை என்கிறார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ விளையாட்டுப் போட்டியில் சப்பாத்துக்கள் இன்றி வெறுங்காலுடன் ஓடித்தான் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை அகிலத் திருநாயகி வென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிலத் திருநாயகி பெற்றுக்கொண்ட பதக்கங்கள்

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்