சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு

🕔 November 28, 2023

க்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குத் சொந்தமான “எம்.எஸ். லங்கா“ (MS LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நலையில், கடந்த 09 வருடங்களாக அக்கரைப்பற்றில் இயங்கி வந்த தனது நிறுவனம் இடைநிறுத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் தலையீடுதான் காரணம் என, சபீஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

தனது நிறுவனம் தொடர்பில் – நாடளுமன்ற குழுவிடம் அதாஉல்லா பொய்யான தகவல்களை கூறி, அதனை இடைநிறுத்தியதாக சபீஸ் குறிப்பிடுகின்றார்.

”அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் ஆகிய பதவிகளைக் கொண்டு தனது நிறுவனத்தை இடைநிறுத்த முடியாத அதாஉல்லா, நாடாளுமன்ற குழுவை நாடி அதனைச் சாதித்துள்ளார்” எனவும் சபீர் தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புணர்வின் அடிப்படையில், தங்களுடைய அரசியல் எதிராளிகளின் பொருளாதாரத்தை முடக்க நினைக்கும் – பழமைவாத அரசியலில் இருந்து அதாஉல்லா இன்னமும் மீட்சி பெறவில்லை என்பது, வேதனையான விடயம் என்றும், சபீஸ் மேலும் கூறியுள்ளார்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் – வருமானமின்றி மக்கள் தத்தளிக்கும் இக்காலத்தில், தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய பல நூற்றுக்கணக்கானோரின் குடும்பங்களின் வாழ்வாதாரம், அதாஉல்லாவின் இந்த நடவடிக்கையினால் சிதைந்துள்ளதாகவும், இவ்வாறான அரசியல் கலாச்சாரம் கூடாது என்றும், இதற்கு முடிவு கட்டப்பட வேண்டுமெனவும் சபீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் கட்சியில் இருந்து கொண்டு, அதாஉல்லாவின் பல்வேறு அரசியல் வெற்றிகளுக்காக உழைத்து வந்த சபீஸ், சில வருடங்களாக அதாஉல்லாவிடமிருந்து பிரிந்து வந்து, சமூக மற்றும் அரசியல் பணிகளில் தனித்து இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்