குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

🕔 November 26, 2023

– நூருல் ஹுதா உமர் –

“குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இளைஞர் கழகங்களில் திறன் விருத்தி வேலைத்திட்டம் எனும் தலைப்பில், மூன்று நாள் பயிற்சி முகாமொன்று நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்தில் இம்மாதம் 24ம், 25ம், 26ம் திகதிகளில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு சபீஸ் கூறினார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேச செயலகங்களின் கீழ் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

சபீஸ் இங்கு தொடர்ந்து பேசுகையில்;

”எல்லாமே இலவசமாக எமது வாழ்வில் கிடைத்து விடாது. சில விடயங்களைப் பெற்றுக் கொள்ள உங்களின் பொன்னான நேரங்களை செலவிட்டு நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் – பிழையான பாதையைத் தவிர்ப்பதற்கும், சரியான பாதையில் பயணிப்பதற்கும் இளைஞர்களுக்கு இவ்வாறான வேலைத்திட்டங்கள் நன்மையாக அமைகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த வேலைத்திட்டம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு பல இளைஞர்களும் பயன்பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்

தலைமைத்துவம், குழு திறன் விருத்தி தொடர்பான பயிற்சி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாடுகள், அதன் தற்போதைய நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் நினைவூட்டல், களத்தில் இளைஞர் கழகங்கள் அமைப்பது தொடர்பான பயிற்சியுடன் கூடிய வேலைத்திட்டம் உள்ளிட்ட பல தலைப்புகளில் இங்கு விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் எச்.யூ. சுசந்த, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்திப், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல் ஜவ்பர் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அலியார் முபாரக் அலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிமனையின் நிருவாக உத்தியோகத்தர் பி. தியாகராஜா, நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஐ.எல்.எம். பரீட், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம். றியாத், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. ஷாமிலூல் இலாஹி, கல்முனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம். அஷீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்