இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

🕔 November 25, 2023

ஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (25) நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

“காஸா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து – இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர குறிப்பிட்டார்.

எனினும், இதற்கு பதிலளித்த தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார – இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார்.

“வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுவதில்லை. பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இஸ்ரேலுடனான இலங்கையின் இருதரப்பு உறவைப் பாதிக்கும். இலங்கை அரசாங்கமானது இஸ்ரேலுடன் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கைக்கு இணங்க உறவுகளைப் பேண அனுமதியுங்கள்”.

“ஒக்டோபர் 07 அன்று இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலை நாங்கள் எதிர்த்தோம். அதனையடுத்து பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதல்களையும் நாங்கள் கண்டித்தோம். பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டு தூதரக உறவுகளை சீர்குலைக்கக்கூடாது” என்றும் அமைச்சர் மனுஷ இதன்போது கூறினார்.

மேலும், இலங்கையர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கோ அல்லது யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கோ எந்தவொரு இலங்கைப் பணியாளரும் அனுப்பப்பட மாட்டார்கள் என குறிப்பிட்ட அமைச்சர் மனுஷ நாணயகார, அனைத்து ஊழியர்களும் போரினால் பாதிக்கப்படாத பகுதிகளுக்கே அனுப்பப்படுவார்கள் என்றார்.

Comments