போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

🕔 November 23, 2023

போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – காஸா கைதிகள் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க பலஸ்தீன் பகுதி முழுவதும் கடுமையான வான் தாக்குதல்களும் கடுமையான ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடன்பட்ட நான்கு நாள் போர் இடைநிறுத்தம் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு – போர் தொடரும் என்ற எச்சரிக்கையை புதுப்பித்துள்ளதோடு, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் 7 முதல் காஸாவில் 14,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது.

இது இவ்வாறிருக்க இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போர்நிறுத்தம் தாமதமாகிவிட்டதால் விரக்தியை வெளிப்படுத்துவதோடு, சரியான தகவல் இல்லாததால் இஸ்ரேலிய அரசாங்கத்தையும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் 04 நாட்கள் போர் இடைநிறுத்தம் செய்யும் ஒப்பந்தந்தத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதோடு, இரு தரப்பிலிருந்து – கைதிகளை விடுவிப்பதற்கும் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்