கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

🕔 November 19, 2023

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த போது, இறக்காமம் பிரதான வீதி, யாசின் சந்தியடியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பின்னால் மோதியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இறக்காமம் வைத்தியசாலைத் தரப்பினர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தனர்.

தான் பயணித்த வாகனம் – மோட்டார் சைக்கிளை மோதியதையடுத்து, அந்த வாகனத்திலிருந்து இறங்கிய ஆளுநர் செந்தில் தொண்டமான், வேறொரு வானத்தில் ஏறி – அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஆளுநரின் வாகனம் – தற்போது இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

Comments