‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்

🕔 November 19, 2023

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கத்தக்கதாக, அதனை இன்று (19) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அப்பிரதேச மக்கள் ‘கறுப்புக் கொடி போராட்டத்தை’ ஆரம்பித்துள்ளனர்.

மேலும், கட்டட திறப்பு விழாவுக்காக – ஆளுநர் இன்று (19) பிற்பகல் குறித்த வைத்தியசாலைக்கு வரும்போது, பொதுமக்கள் – ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென மூன்று மாடிக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கட்டடத்தில் மின் தூக்கி (லிப்ட்) பொருத்தப்படவில்லை. கட்டடத்தின் உட்பகுதியில் நீர் ஒழுக்கு ஏற்பட்டு, அது சீர் செய்யப்படாமை காரணமாக, நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் பழைய கட்டடத்தில் இயங்கிவந்த வெளி நோயாளர் பிரிவு, மருந்தகம், அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவை புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், நோயாளர் விடுதிகள் இன்னும் பழைய கட்டடத்திலேயே உள்ளன. மேலும் புதிய கட்டடத்தின் முதலாம் மாடிக்கு மாற்றப்பட்ட – தொற்றா நோயாளர்களுக்கான மருந்தகம், ‘லிப்ட்’ வசதி இல்லாமை காரணமாக – மீண்டும், பழைய கட்டடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு பல குறைபாடுகள் உள்ள நிலையில், புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் – இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் திறப்பு விழா நிகழ்வு குறித்து – வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு நேற்றைய தினம்தான் வைத்தியசாலை நிருவாகம் அறிவித்தது.

அபிவிருத்திக் குழுவினரை நேற்று வைத்தியசாலைக்கு அழைத்த வைத்தியசாலை நிருவாகத்தினர், புதிய கட்டடத்தை ஆளுநர் திறுந்து வைக்கவுள்ள நிகழ்வு குறித்து தெரியப்படுத்தினர்.

ஆனால், புதிய கட்டடத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கக் கூடாது என, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வலியுறுத்தியதோடு, விடயம் அறியாமல் கட்டடத்தை திறந்து வைப்பதற்கு வருகை தரவுள்ள ஆளுநர் தொடர்பிலும் தமது அதிருப்தியை அதன்போது வெளியிட்டனர்.

மேலும் புதிய கட்டடத்தை அரைகுறை நிலையில் திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சில உறுப்பினர்கள் – நேற்றைய தினம் நடந்த கூட்டதிலிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், இன்று அட்டாளைச்சேனை பிரதே வைத்தியசாலைச் சூழலில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளமையினைக் காண முடிகிறது.

‘கிழக்கு ஆளுநரே, பூரணப்படுத்தப்படாத அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் இன்றைய (19) கட்டடத் திறப்பு விழாவை நிறுத்து’ எனும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளும் வைத்தியசாலை சுற்றயல் உள்ளிட்ட பகுதிகளில் தொங்க விடப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, இன்று பிற்பகல் வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைப்பதற்கு ஆளுநர் வருகை தரும்போது, பொதுமக்கள் – ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.

“அரசியல்வாதிகள் ‘படம்’ காட்டுவதற்காகவும், அரசியல்வாதிகளிடம் அதிகாரிகள் நல்ல பெயர் எடுப்பதற்காகவும், நோயாளர்களின் உயிருடன் விளையாடக் கூடாது. வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைத்தால், அதற்குப் பிறகு, இந்தக் கட்டடத்திலுள்ள குறைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாது. எனவேதான், புதிய கட்டடத்தின் தேவைகளை பூரணப்படுத்திவிட்டு, அதனைத் திறந்து வையுங்கள் என கூறுகிறோம்” என, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்