அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

🕔 November 18, 2023

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் அவசர நடவடிக்கையினை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில், அந்தப் பிரதேச மக்கள் தமது கண்டனங்களை வெளியிடுகின்றனர்.

குறித்த வைத்தியசாலையை நாளை ஞாயிற்றுக்கிழமை – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் – முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது ஒதுக்கிய நிதியில் அமைக்கப்பட்டது.

இதுவரை இந்த கட்டட நிர்மாணத்துக்காக 11 கோடி ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலைக் கட்டடத்தில் இதுவரை மின் தூக்கி (Lift) பொருத்தப்படவில்லை. இதனால் இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த தொற்றா நோயாளர்களுக்கான மருந்தகம், அங்கிருந்து அகற்றப்பட்டு, வைத்தியசாலையின் பழைய கட்டடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாடிப்படிகளில் நோயாளர்களால் ஏறி இறங்க முடியாமை காரணமாகவே இவ்வாறு மருந்தகம் இடமாற்றப்பட்டது.

மேலும் புதிய கட்டடத்திலுள்ள நீர் குழாய்களில் அதிகளவு ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாகவும், அதனைச் சரி செய்யாமையினாலும் – அங்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பழைய கட்டடத்திலுள்ள நோயாளர் விடுதிகள் – இதுவரை புதிய கட்டடத்துக்கு மாற்றப்படாத நிலையிலேயே, புதிய கட்டடத்தை திறப்பதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் காரியாலயத்தினர் அவசரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய கட்டடத்திலுள்ள மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அங்கு நோயாளர் விடுதிகளும் மாற்றப்பட்ட பின்னரே, புதிய வைத்தியசாலைக் கட்டடம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட வேண்டும் என, இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கல்முனைப் பிராந்தியய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு முன்னர் -இந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கிழக்கு மாகாண ஆளுநரின் அவசரத்துக்காகவோ, குறைபாடுகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தை திறந்து வைத்து ‘படம்’ காட்டக் கூடாது எனவும் இப் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்படி வைத்தியசாலையின் பழைய கட்டடத்திலிருந்து, புதிய கட்டடத்தின் தளப் பகுதிக்கு – வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருந்தகம் ஆகியவை சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டு, அவை இயங்கி வரும் நிலையிலேயே, அந்தக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் பழைய கட்டடத்தை – பிராந்திய மருந்து விநியோகக் களஞ்சியசாலையாகப் பயன்படுத்தும் பொருட்டு கைப்பற்றிக் கொள்வதற்காகவே, குறைபாடுகளைக் கொண்ட புதிய கட்டடத்தை அவசரமாகத் திறந்து வைக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்