அலி சப்றி ரஹீம் எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போக்குக் காட்டும் நயீமுல்லா: தேர்தல் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

🕔 November 16, 2023

– முன்ஸிப் அஹமட் –

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்குமாறு, தேர்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது கட்சி கோரிக்கை விடுத்த போதிலும், அதனைச் செய்யாமல் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லா இழுத்தடித்து வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களும், முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களும் ஒன்றிணைந்து, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் ‘தராசு’ சின்னத்தில் போட்டியிட்டனர்.

அந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக – தராசு சின்னத்தில் களமிறக்கிய அலி சப்றி ரஹீம், நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.

இதன் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல், நாடாளுமன்றத்தில் அலி சப்றி ரஹீம் – பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாக செயற்பட்டு வந்தார். இதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.

இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த அலி சப்றி ரஹீம், விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அபராதம் விதிக்கப்பட்டு, தங்கமும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் விடுதலையானார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தீவிரப்படுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அவரை கட்சியில் இருந்து நீக்கியது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஒப்பந்தத்தில் பொருந்திக் கொண்டபடி – தமது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் நீக்குமாறு, அந்தக் கட்சியின் செயலாளர் எம். நயீமுல்லாவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எழுத்து மூலம் அறிவித்தது. ஆனால் இதுவரையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அலி சப்றி ரஹீம் நீக்கப்படவில்லை என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

”முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் ஒப்பந்தமொன்று செய்துள்ளது. எமது கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒருவர் – எங்கள் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டால், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பும் அந்த நபரை – கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்க வேண்டும்” என றிசாட் பதிதீன் கூறினார்.

“அலி சப்றி ரஹீமை எமது கட்சியில் இருந்து நீக்கிமை தொடர்பான கடிதத்தை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாவை அழைத்து அவர் கையில் கொடுத்தோம். அதனைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், பல வாரங்கள் ஆகியும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையிலிருந்து அலி சப்றி ரஹீம் நீக்கப்டவில்லை.

இது தொடர்பில் பேசுவதற்காக நயீமுல்லாவின் தொலைபேசியை பல தடவை அழைத்தோம் – அவர் பதிலளிக்கவில்லை. அவரின் வீட்டுக்கும் தேடிச் சென்றோம். அங்கு அவர் இல்லை என பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த ஊடக சந்திப்பை நாம் நடத்துகின்றோம்” என, றிசாட் குறிப்பிட்டார்.

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லா என்பவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனர் (மாமி மகன்) என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலும் நயீமுல்லா உறுப்பினராக உள்ளார்.

மேலும், ரஊப் ஹக்கீம் அமைச்சராக பதவி வகித்த அதிகமான சந்தர்ப்பங்களில், அவரின் பிரத்தியேக செயலாளராகவும் – நயீமுல்லாதான் பதவி வகித்து வந்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அந்தக் கட்சியின் செயலாளர் எஸ். சுபைதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்