நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல

🕔 November 15, 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புரட்சியான ஒரு வரவு – செலவுத்திட்டத்தையே இம்முறை சமர்ப்பித்துள்ளார். இது வங்குரோத்து அடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஒரு நாட்டின் வரவு – செலவுத் திட்டமாகும். வேறு எந்தவொரு நிதி அமைச்சரும் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது இவ்வாறானதொரு நிலைமை நாட்டில் இருக்கவில்லை.

இந்நாடு, பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு தர்க்க ரீதியிலான பிரதான இரண்டு காரணங்களே உள்ளன. முதலாவது, அரச வரவு – செலவுத் திட்டத்தில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை. இரண்டாவது, சர்வதேச கொடுப்பனவுக் கையிருப்பின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை ஆகும்.

நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக செலவுகளுக்கு போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன.

கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களும் மூன்று பிரதான வழிமுறைகளின் ஊடாக – இந்தப் பற்றாக்குறைகளை ஈடுசெய்துள்ளன. முதலாவது, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளல். இரண்டாவது, அரச சொத்துக்களை விற்பனை செய்தல். மூன்றாவது, இவை இரண்டும் போதுமானதாக இல்லாதவிடத்து பணத்தை அச்சிடுதல் ஆகும்.

அரச நிதி தொடர்பான அனைத்து முகாமைத்துவ அதிகாரங்களும் நாடாளுமன்றத்துக்கே உள்ளன. இவ்வாறு பற்றாக்குறை தொடர்ந்தும் ஏற்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக, கடந்த காலங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. துரதிஷ்டவசமாக அண்மைய வருடங்களில் இந்த சட்டங்களுக்கேற்ப செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

நிதி முகாமைத்துவம் தொடர்பில், அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கம் தோல்வி கண்டதையடுத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று, இந்த நெருக்கடியைத் தீர்க்க முன்வந்தார். இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இதற்குப் பொருத்தமான தீர்மானமாக கடன் மறுசீரமைப்பு மூலம் தீர்வைப் பெறுவதற்கு ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க, நான்கு முக்கிய நோக்கங்களைக் கருத்திற்கொண்டு 2024 வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இயலுமான அளவு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல், அரசாங்கத்தின் மூலதனச் செலவுகள் மற்றும் நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அதிகரித்தல், இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைக் குறைத்தல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக சர்வதேச கொடுப்பனவுகளில் நடைமுறைக் கணக்கு மேலதிகக் கையிருப்பு மீதியைப் பேணுவதன் மூலம் அதில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

2024 வரவு – செலவுத்திட்டம் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

வரவு – செலவுத் திட்டத்திற்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது. கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.

அதன் பிறகு, முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்