சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 November 14, 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரசியல் விமர்சகர் ரம்சி ராசிக்கின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகஉச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ராம்சி ராசிக்கிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்ததுடன், அவருக்கு 01 மில்லியன் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐசிசிபிஆர்) சட்டத்தின் பிரிவு 3, தெய்வ நிந்தனையை குற்றமாக கருதக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் விமர்சகர் ராம்சி ராசிக் – சமூக ஊடகத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக, ஏப்ரல் 2020 இல் குற்றப் புலனாய்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதோடு, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டப் பிரிவு 56 இன் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஐந்து மாதங்கள் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சி ராசிக், தனது சமூக ஊடக இடுகையை குற்றப் புலனாய்வு பிரிவு – தவறாகப் புரிந்துகொண்டமையினால், தான் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், எவ்வித சாட்சியங்களும் இல்லாத காரணத்தினால் இவ்வருடம் செப்டெம்பர் மாதம், அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தினால் – அவர் குற்றமற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டு – வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Comments