“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

🕔 November 5, 2023

காஸா மீது அணுகுண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு விருப்பம் இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியமையை – சஊதி அரேபியா கண்டித்துள்ளது.

இத்தகைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தில் “தீவிரவாதமும் மிருகத்தனமும்” எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது என, சஊதி தெரிவித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி சஊதி அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“குறித்த அமைச்சரை அரசாங்கத்தில் இருந்து உடனடியாக நீக்கத் தவறியதும், அவரின்உறுப்புரிமையை முடக்காமையும் – இஸ்ரேலிய அரசாங்கத்தின் அனைத்து மனித, தார்மீக, மத மற்றும் சட்ட தரநிலைகள் மற்றும் மதிப்புகள் மீதான வெறுப்பின் உச்சத்தை பிரதிபலிக்கிறது” என்றும் அந்த செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சரின் மேற்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவரை – அமைச்சரவைக் கூட்டங்களில் இருந்து பிரதமர் நெதன்யாஹு இடைநீக்கம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வானொலியொன்றுக்கு அமைச்சர் அமிச்சாய் எலியாஹு பேட்டியளித்த போது, “காஸா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டுமா: என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்” என பதிலளித்தார்.

பலஸ்தீன மக்களின் தலைவிதியைப் பற்றி இந்த பேட்டியில் கேட்டதற்கு; “அவர்கள் அயர்லாந்து அல்லது பாலைவனங்களுக்குச் செல்லலாம், காஸாவில் உள்ள அரக்கர்கள் அவர்களாகவே ஒரு தீர்வைக் காண வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்து – இஸ்ரேல் பிரதமருக்குரிய ட்விட்டர் தளத்தில்; ‘அமைச்சர் அமிச்சாய் எலியாஹுவின் அறிக்கைகள் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் – சர்வதேச சட்டத்தின் மிக உயர்ந்த தரத்தின்படி செயல்படுகின்றன. எங்களின் வெற்றி வரும் வரை அதைத் தொடர்வோம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் அமிச்சாய் எலியாஹு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்