“உடனடி போர் நிறுத்தம் வேண்டும்”: பிளிங்கனுடனான சந்திப்பின்போது, பலஸ்தீன் ஜனாதிபதி அப்பாஸ் கோரிக்கை

🕔 November 5, 2023

லஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பிளிங்கனிடம் ‘உடனடியான போர்நிறுத்தம்’ அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான உதவிகள் காஸா பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹ்மூத் அப்பாஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு – ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லாவில் இன்று (05) நடைபெற்றது.

இதன்போது பிளிங்கனிடம் “உடனடியான போர்நிறுத்தம்” மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான உதவிகள் காஸா – பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அப்பாஸ் கூறினார்.

காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, முற்றுகையிடப்பட்ட பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதையும் உறுதிசெய்தார்.

பலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயரக் கூடாது என்றும், சுதந்திர பலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு – வொஷிங்டன் உறுதிபூண்டிருக்கிறது எனவும் பிளின்கென் தெரிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனாலும் பிளிங்கன் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.

“காஸாவில் அடுத்து என்ன வரப்போகிறது” என்பதில் பலஸ்தீன் அதிகாரசபை – முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று, அப்பாஸிடம் பிளிங்கன் கூறினார் என, அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்