பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

🕔 November 4, 2023
ஷேக் அகமது யாசின்

மாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஷேக் அகமது யாசின். அவர் இப்போது உயிருடன் இல்லை.

ஷேக் அகமது யாசின் – இஸ்லாமிய மதகுரு. இஸ்ரேல் உருவானபிறகு அல் – ஜுரா பகுதியிலிருந்து அகதியாக காஸாவுக்கு அடைக்கலம் தேடி வந்தவர் யாசின்.

பாடசாலை காலத்தில் முதுகில் அடிபட்டு பாதிப்பு ஏற்பட்டதால், காலம் முழுக்க சக்கர நாற்காலியில் முடங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. கண் பார்வையும் அவ்வளவாகத் தெரியாது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லவோ, சாப்பிடவோ, படிக்கவோ என்று எல்லாவற்றுக்கும் அடுத்தவர்கள் உதவி தேவைப்பட்டது.

அப்படிப்பட்ட சூழலிலும் அவர் இளைஞர்களை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தார். கணிசமான பலஸ்தீன இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டனர். அவர்கள்தான் அவரையும் பராமரித்தனர்.

அவர் நீண்டகாலம் இஸ்ரேலிய சிறையில் இருந்தார். மொசாட் உறுப்பினர்கள் இருவரை பிடித்து வைத்துக் கொண்டு பதிலுக்கு – இவரை விடுவிக்குமாறு விதிக்கப்பட்டபோது, இஸ்ரேல் அடிபணிந்தது.

1987 டிசம்பர் 10ஆம் திகதி ஹமாஸ் உருவானது. என்றாலும், அதற்கு ஹமாஸ் என்று பெயர் வைக்கப்பட்டது 1988 ஜனவரியில்தான். Ḥarakat al-Muqāwamah al-ʾIslāmiyyah என்பதன் சுருக்கமே ஹமாஸ். 

மார்ச் 22, 2004 அன்று விடியற் காலை தொழுகைக்காக செல்லும் வழியில் – அவரை இஸ்ரேலிய ராணுவம் இலக்குவைத்து – வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது.

ஆனாலும் ஹமாஸ் வீழ்ந்து விடவில்லை. அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக இயங்கும் அந்த இயக்கம் – முக்கிய தலைவர்களால் வழிநடத்தப்படுகிறது.

அந்த வகையில் இஸ்ரேலின் கொலைப்பட்டியின் உச்சத்தில் இருக்கும் – ஹமாஸின் முக்கிய தலைவர்களை தெரிந்து கொள்வோம்.

இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh)

தற்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இவர்தான். கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் வசிக்கிறார். காஸாவில் ஓர் அகதிகள் முகாமில் பிறந்தவர். காஸாவில் உள்ள இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்கப்பட, அதில் சேர்ந்தார். பிற்காலத்தில் அதே பல்கலைக்கழகத்துக்கு ‘டீன்’ பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

இஸ்மாயில் ஹனியே

ஹமாஸ் தலைவர் யாசினுக்கு நெருக்கமானவர். பலமுறை சிறை சென்றிருக்கிறார். ஒருமுறை நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இஸ்‌ரேல் விமானத் தாக்குதலில் இவர் கை சேதமடைந்தது. பலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் வென்றபோது பிரதமர் ஆனார்.

தற்போது ஹமாஸ் நடத்திய தாக்குதலை கத்தாரில் தன் அலுவலகத்தில் இருந்தபடி ஹனியே பார்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின. நீண்ட காலமாக இஸ்ரேல் உளவுத்துறையின் கொலை முயற்சியிலிருந்து ஹனியே சாமர்த்தியமாக தப்பித்து வருகிறார்.

மஹ்மூத் அல் – ஸாஹர் (Mahmoud al-Zahar)

ஹமாஸ் அமைப்பை நிறுவிய தலைவர்களில் ஒருவர். பலஸ்தீனத்தில் ஹமாஸ் ஆட்சி அமைத்தபோது, அதன் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியவர். தற்போது 60 வயதாகும் ஜாஹர், காஸாவில் பிறந்தவர்.

எகிப்தில் மருத்துவம் படித்த அறுவை சிகிச்சை நிபுணர். ஹமாஸ் தலைவர் யாசினுக்கு பிரத்தியேக டொக்டராக இருந்தவர். கடந்த 2003-ம் ஆண்டு இஸ்‌ரேல் விமானப்படை இவர் வீட்டில் குண்டுவீசியதில் – வீடு நொறுங்கியது. ஸாஹர் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், மூத்த மகன் இறந்துவிட்டார்.

மஹ்மூத் அல் – ஸாஹர்

ஹமாஸ் அமைப்பில் இருந்த இன்னொரு மகனும் இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் பிறகு பலியானார். தீவிர மத நம்பிக்கையாளரான ஸாஹர், ‘எப்போதும் ஹமாஸ் அமைப்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடக்கூடாது’ என்ற நிலைப்பாடு உள்ளவர்.

யஹ்யா சின்வர் (Yahya Sinwar)

கடந்த ஒக்டோபர் 7இல் – இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு திட்டமிட்டவர் என்று இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டுவது இவரைத்தான்.

இஸ்மாயில் ஹனியேவுக்கு அடுத்து ஹமாஸ் அதிகார வரிசையில் இரண்டாவது ஆளாக இருக்கிறார். மற்ற தலைவர்கள் கத்தாரில் இருக்க, காஸாவில் இருந்தபடி அந்தப் பகுதியை நிர்வாகம் செய்வது இவர்தான். 60 வயதாகும் இவர், காஸா பகுதியில் ஓர் அகதி முகாமில் பிறந்தவர்.

கல்லூரி காலத்தில் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற இவருக்கு, சிறையில்தான் பலஸ்தீன போராளிகளின் தொடர்பு கிடைத்தது.

யஹ்யா சின்வர்

பலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கு உளவாளிகளாக இருப்பவர்களைக் கண்டறிந்து களையெடுக்கும் பொறுப்பை ஹமாஸ் இவரிடம் கொடுத்தது. படிப்படியாக ஹமாஸ் ராணுவப் பிரிவில் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 13 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் இருந்தவர். இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரைப் பணயக்கைதியாகப் பிடித்து, அரசுடன் பேரம் பேசி இவரை விடுதலை செய்ய வைத்தது ஹமாஸ்.

இவர் வீட்டை இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி அழித்தது. ஆனால், தாக்குதலில் இவர் தப்பிவிட்டார். அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக ‘தீவிரவாதி’ என்று அறிவிக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்களில் யாஹ்யா சின்வர் ஒருவர்.

முகம்மது தைய்ஃப் (Mohammed Deif)

ஹமாஸின் ஆயுதப்பிரிவான அல் – காஸிம் பிரிகேட்ஸ் (Al Qassam Brigades) தலைவர். இஸ்ரேல் அச்சத்துடன் பார்க்கும் ஒருவர். காஸாவில் அகதி முகாம் ஒன்றில் பிறந்தவர். இவரைக் கொல்வதற்கு பலமுறை இஸ்ரேல் உளவுத்துறை தாக்குதல் நடத்தியுள்ளது. அப்படி ஒரு தாக்குதலில் தன் ஒரு கண்ணை இழந்தார். காலிலும் காயம் ஏற்பட்டது. அந்தத் தாக்குதலில் அவர் மனைவி, மகன், மகள் எல்லோரும் இறந்துவிட்டனர்.

பொதுவெளியில் அதிகம் வராத ஹமாஸ் தலைவர். தன் மீதான தாக்குதலைத் தவிர்ப்பதற்காக தினம் தினம் வெவ்வேறு இடங்களில் தங்குவார். ‘இன்று அவர் எங்கே தங்குவார்’ என்பது அவரின் பாதுகாப்பு வீரர்களுக்கே தெரியாது.

முகம்மது தைய்ஃப்

ஹமாஸின் தற்கொலைப் படைத் தாக்குதல்களைத் திட்டமிடுபவர். இஸ்ரேலியப் பகுதிகளில் ஹமாஸ் அடிக்கடி ஏவும் காஸிம் ரொக்கெட் என்ற மினி ஏவுகணையை உருவாக்கியவர்.

காஸா பகுதியில் ‘சுரங்க நெட்வொர்க்’ ஒன்றை அமைத்து, அங்கிருந்தபடி தாக்குதல்களை நடத்துகிறது ஹமாஸ். அந்த ‘நெட்வொர்க்கை’ உருவாக்கியது இவர்தான். ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு – முகம்மது தைய்ஃபின் தந்தை, சகோதரர் மற்றும் சில உறவினர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு பலியாகியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்