“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

🕔 November 3, 2023

– மரைக்கார் –

நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், நாட்டில் பல பகுதிகளில் ‘சதொச’ கிளைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் தமது பிரதேசத்தில் ‘சதொச’ கிளை இல்லாத நிலையில் – விலை குறைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறும் பொருட்களை, எங்கு சென்று மக்கள் பெற்றுக் கொள்வது?

கடந்த நல்லாட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராக றிசாட் பதியுதீன் இருந்தபோது, நாட்டில் ஏராளமான ‘சதொச’ கிளைகளைத் திறந்ததோடு, அவற்றில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கினார்.

மட்டுமன்றி ‘சதொச’வை லாபமீட்டும் நிறுவனமாகவும் மாற்றிக் காட்டினார்.

ஆனால், நல்லாட்சிக்குப் பின்னர் உருவான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்ட விமல் வீரவன்ச – நாட்டிலிருந்த ‘சதொச’ கிளைகள் பலவற்றை மூடினார். அதன் காரணமாக பல இளைஞர்கள் தூரப் பிரதேசங்களிலுள்ள ‘சதொச’ கிளைகளுக்கு தொழில் நிமித்தம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் தமது குறைந்த சம்பளத்தில் தூரப்பகுதியில் தங்கி – வேலை செய்வதற்கான பொருளாதார நிலை இல்லாததால், அவர்கள் தமது தொழிலைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் காலத்தில் ‘சதொச’வில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், அவர்களாகவே தமது வேலைகளைக் கைவிட வேண்டும் என்பதற்காகவே, அப்போதைய வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச – அதிகமான ‘சதொச’ கிளைகளை மூடியதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.

எடுத்துக்காட்டாக அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்திருந்த ‘சதொச’ கிளைகளை, அப்போதைய அமைச்சர் விமல் வீசவன் மூடியமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல், நாட்டில் பல பகுதிகளில் இல்லாத ‘சதொச’ கிளைகளில், விலை குறைக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் கூறுவது கேலிக்கூத்தானதாகும்.

ஆகக் குறைந்தது, நல்லாட்சிக்குப் பிறகு நாட்டில் மூடப்பட்ட ‘சதொச’ கிளைகளையாவது அரசாங்கம் மீளவும் திறக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்