இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

🕔 October 30, 2023
ஹமாஸின் ராணுவப் படை வெளியிட்டுள்ள வீடியோவில், நடுவில் உள்ள பெண் பேசுகிறார்

ஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம் படையணி இன்று (30) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அவர்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியப் பெண்கள் காண்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் ஹிப்ரு மொழியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்.

01 நிமிடமும் 17 செக்கன்களும் ஓடும் அந்த வீடியோவில் பேசுகின்ற பெண்ணொருவர், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு தனது செய்தியைச் சொல்கிறார்.

அதில் தங்களை விடுவிக்குமாறு கோரும் அந்தப் பெண், அரசியல், பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியாக நெதன்யாகு தோல்வியடைந்துவிட்டார் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள அனைத்து கைதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுக்கிறார்.

“ஒக்டோபர் 07ஆம் திகதி ஏற்பட்ட தோல்விக்கு நீங்கள்தான் பொறுப்பு” எனவும், நெதன்யாஹுவை அந்தப் பெண் குற்றம்சாட்டுகிறார்.

மேலும், “எங்களைக் கொல்ல வேண்டும் என்பதா உங்கள் நிலைப்பாடு” எனவும், நெதன்யாஹுவிடம் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஹமாஸ் வெளியிட்ட கைதிகளின் வீடியோவை தாம் வெளியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக – அல் ஜசீரா அறிவித்துள்ளது.

‘அந்த வீடியோவில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் – நேரடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகஹுவிடம் பேசியுள்ளார். ஆனால் இது அவருடைய வார்த்தைகளா அல்லது அவர் வற்புறுத்தப்பட்டு பேச வைக்கப்பட்டுள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை’ எனவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் வெளியிட்டுள்ள மேற்படி வீடியோவை “உளவியல் பிரச்சாரம்” என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Comments