‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

🕔 October 29, 2023

ணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப் பெறுமதியில் 345.40 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலியும் வற் மோசடிக்கு உடந்தையாக இருந்தமைக்காக – அவருக்கு சிறைத்தண்டனையும் பெரும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அல்லிராஜா சுபாஸ்கரனுக்குச் சொந்தமான லைக்கா மொபைல், இந்தத் தீர்ப்புடன் உடன்படவில்லை என்றும், மேல்முறையீடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2014 மற்றும் 2016 க்கு இடையில் 17 மில்லியன் யூரோக்களை உள்ளடக்கிய “சிக்கலான மற்றும் விரிவான பணமோசடி முறைகளில், நிறுவனங்கள் தெரிந்தே பங்கேற்றுள்ளன” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஐந்து ஆண்டுகளுக்கு வணிகத்தை நிர்வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

லைக்கா மொபைலின் பொது முகாமையானர் அலைன் ஜோசிமெக் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 120,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லைக்கா மொபைல் குழுமம் – இலங்கையில் பல ஊடக நிறுவனங்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(செய்தி மூலம் – ஸ்ரீலங்கா மிரர்)

Comments