வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

🕔 October 29, 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

– சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் –

க்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும். பழைய பகைகளை உயிர்ப்பித்து, குரோதம் வளர்க்கும் விரோதம் இந்த நினைவூட்டல்களில் இருக்கக் கூடாது. இதை விரும்பியவனாகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

தாயக பூமியிலிருந்து விரட்டப்படுவதும், வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுவதையும் விட வேறு வலிகள் அல்லது வேதனைகள் ஏது? இதனாலேயே, இந்த இருத்தலுக்கான போர்கள் மிக வலிமைகளாக உள்ளன. ‘இழந்தது போதும், இருப்பதை பாதுகாப்போம்’ என்ற மன வலிமைகளுடன்தான் இப்போர்கள் இடம்பெறுவதுண்டு. இவ்வாறான மன வலிமைகள் சில வேளைகளில் மன வலிகளாக மாறுமளவுக்கு போர்க்களங்கள் உக்கிரமடைவதுமுண்டு. இதற்கு இன்று நடைபெறும் உக்ரைன் – ரஷ்யா மற்றும் இஸ்ரேல் – காஸா போர்கள் கண்ணெதிர் சாட்சிகள். 610 நாட்களைக் கடந்துள்ள மேற்கு யுத்தமும் மூன்று வாரங்களை தொட்டு நிற்கும் மத்திய கிழக்கு மோதலும் ஏற்படுத்தியுள்ள வலிகள் – விரட்டப்பட்ட என்போன்ற அகதிகளுக்கு ஏற்பட்ட வடுக்களை விட எத்தனை மடங்கோ?

இந்தப் போரில் மனச்சாட்சிகளுக்கு இடமிருக்காது, மனுக்குலத்தின் மீது தயவிருக்காது. காஸா மக்களை வௌியேறுமாறு கோரப்பட்டுள்ளதால் – சிலர் வௌியேறலாம். உறவுகள், சொத்துக்கள், கால்நடைகள், தோட்டங்கள் மற்றும் தொழில்புரியும் நிலங்களை விட்டு வௌியேறுவதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

வடபுல முஸ்லிம்களும் காஸா முஸ்லிம்களும் நமது நாட்டிலிருந்து வௌியேறிய தமிழ் சகோதர்களை போலவல்ல. ஏனெனில், இவர்களின் வௌியேறலோ, தமிழர்களின் தாயக உரிமைக்கான தேவையை சர்வதேசமயப்படுத்தியிருக்கிறது. ஆனால், காஸா மற்றும் வடபுல நிலைமைகள் இவ்வாறில்லை. காஸா சகோதரர்களுக்கோ ஏற்கனவே இருந்த தாயக உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. வடபுல முஸ்லிம்களுக்கோ கிடைக்கவிருந்த உரிமை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதில், இனச்சுத்திகரிப்புக்கான வடிவங்கள் வெவ்வேறு இடைவெட்டுக்களுக்குள் வேலையாற்றியுள்ளன.

நமது நாட்டு அரசியல் பிணக்குகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கட்டும். இத்தேசிய பிரச்சினைகளுக்குள் சில சில்லறை முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட வேண்டியுள்ளன. தமிழ் பேசும் மக்களின் நிலமென்றால் என்ன? சிறுபான்மையினரின் உரிமைகள் எவை? தமிழர்களையும் முஸ்லிம்களையும் வேறுபடுத்தும் அரசியல் எது? சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்தியா தமிழ் பேசும் அரசியல் பயணிக்கிறது? அல்லது மொழியை விடவும் மதங்கள் சிறுபான்மை அரசியலுக்குள் ஆதிக்கம் செலுத்துகிறதா? இக்கேள்விகளின் விடைகளிலிருந்துதான் வடபுல முஸ்லிம்களின் வௌியேற்றத்தை அலச வேண்டியுள்ளது.

சிறுபான்மைச் சமூகங்கள் அல்லது தமிழ்மொழிச் சமூகங்கள் என்பது தமிழர்களையும் முஸ்லிம்களையும்தான். இவர்கள், சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்திய பார்வையில் சிறுபான்மைச் சமூகங்களாகவே உள்ளனர்.

இந்தப் பார்வை, பொதுவான உரிமைப் போராட்டத்தில் இவர்களை ஒன்றிணைக்க உதவுகிறது. மொழி மற்றும் நிலம் என்பவற்றுக்குள் சுருங்கிய நிலையில் (வடக்கு, கிழக்கு) உள்ளன இப்பார்வைகள். மதமென்று வருகின்றவேளை, முஸ்லிம்கள் வேறுபடுத்தப்படுகின்றனர் அல்லது வேறுபட விரும்புவதாகவும் சொல்லலாம். வடபுல வௌியேற்றம்தான் இந்த வேறுபடலை வேரூனடற வைத்து வளர்த்திருக்கிறது. எனவே, வௌியேற்றத் தூண்டிய சக்திகளின் மனநிலை அப்போது எப்படியிருந்தது என்பதையே தேடிப்பார்க்க வேண்டும்.

ஆயுத அமைப்பின் உயர் மட்டம் விரும்பியிருந்தாலும் அடிமட்ட போராளிகள் மற்றும் சக சகோதரர்கள் விரும்பவில்லை. ஏன், மிதவாத தமிழ் அரசியல் தலைமைகள் இவ்வௌியேற்றத்தை வெறுத்தேயிருந்தன. ஆனால், வௌியில் பேசுமளவுக்கு நிலைமைகள் அன்று இருக்கவில்லை.

காஸாவில் நடக்கும் – எல்லை கடந்த மனித உரிமை மீறல்களை, எமது நாட்டின் தமிழ் தலைமைகள் முன்னின்று கடுமையாக கண்டிப்பது, முஸ்லிம் தலைமைகளுக்கு ஒரு படிப்பினைதான். ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான மனநிலையிலேயே இன்னும் தமிழர்கள் இருக்கின்றனர். எனவே, முஸ்லிம்களும் அரச ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை சிறுபான்மைச் சமூகங்கள் என்ற உணர்வில் கண்டிக்க முன்வருவது சிறந்ததென்ற பொதுவான படிப்பினையை புடம்போட்டுக் காட்டுகிறது இக்கண்டனங்கள்.

பொத்துவில் முஹுது மலை விவகாரம், குருந்தூர் மலை, மயிலிட்டி என அடுக்கிக்கொண்டே செல்லக்கூடிய சம்பவங்களை ஆக்கிரமிப்புக்கான அடையாளமாகவே தமிழ்மொழிச் சமூகங்கள் நோக்க வேண்டியுள்ளன. நோக்குகின்றனர்தான், தீர்வவென்று வருகின்ற போதுதான் தேவையில்லாத சர்ச்சைகள் தழைக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்