கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

🕔 October 27, 2023

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர அட்டவணைக்குள் மேலும் பஸ்களை சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, சட்டத்துக்கு முரணாக – புதிதாக அனுமதிப்பத்திரங்களை ஏலத்தில் விநியோகித்து, அதன் வருமானத்தை அரசாங்கத்துக்குக் காண்பிப்பதன் மூலம், அதிகாரிகள் செய்து வருகின்ற மோசடிகளை மறைக்க முயற்சிக்கின்றனர் என, தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

எனவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை, மேற்படி அதிகாரசபை – உடன் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஐ.எம்.எஸ்.ஏ. மௌலானாவின் கையொப்பத்துடன் – கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் அந்தக் கடிதத்தில்;

‘கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அதன் அதிகாரிகள் மோசடி செய்து வருகின்றமையை ஆதாரத்துடன் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக பல வருடங்கள் எழுத்து மூலம் அறிவித்து வருகின்றோம்.

மேலும் புதிதாக அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதை நிறுத்துமாறு கோரி 2023.10.05 ஆம் திகதி எழுத்து மூலம் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதற்கு இன்றுவரையில் எவ்வித பதில்களும் கிடைக்கப்பெறவில்லை என்பதனையும் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

மேலும், பொத்துவில் அக்கரைப்பற்று வீதியில் 15 நிமிடங்களுக்கு ஒவ்வொரு பஸ் வண்டியும் அக்கரைப்பற்று வாழைச்சேனை வீதியில் 5, 10 நிமிடங்களில் ஒவ்வொரு பஸ் வண்டியும் அக்கரைப்பற்று கல்முனை – திருகோணமலை வீதியில் 20, 30 நிமிடங்களில் ஒவ்வொரு பஸ் வண்டியுமாக சேவையில் ஈடுபடுகின்றன.

ஆனால், இந்த பஸ் வண்டிகளுக்கு போதியளவு பயணிகள் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். வீதிக்கு வந்து பரீட்சித்துப் பார்த்தால் மாத்திரமே இவ்விடயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

2023.07.09 ஆம் திகதி ஏற்பட்ட மன்னம்பிட்டி பஸ் விபத்தை எவரும் மறக்க முடியாது. ஒருங்கிணைந்த நேர அட்டவணைக்குள் போட்டித்தன்மையை உருவாக்கியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

எனவே, தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் விதமாக, புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவது சட்டத்துக்கு மாற்றமானது. எனவே இவ்வாறான அனுமதிப்பத்திர வியாபாரத்தை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்தி, அதன் அதிகாரிகள் எவ்வளவு நிதியை மோசடி செய்துள்ளனர் என்பதனையும், அதிகாரசபையின் தலைமைக் காரியாலயம் மற்றும் மாவட்டக் காரியாலயங்களில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டு வந்துள்ளது என்பதனையும், அதிகாரிகளால் சுய லாபத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் சம்பந்தமாகவும் – பக்கச்சார்பின்றி சோதனையிடக்கூடிய அதிகாரிகள் சோதனையிட்டால், அதிகாரசபைக்கு கிடைக்கும் உண்மையான வருமானத்தை கண்டுகொள்ள முடியும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலக பிரதம கணக்காய்வாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்