ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது

🕔 October 25, 2023
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் – ஐநா பாதுகாப்பு சபை விவாதத்தில் நேற்று செவ்வாய்கிழமை பேசினார்

ஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரை தொடர்பில் இஸ்ரேல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஐ.நா செயலாளரைப் பதவி விலகுமாறும் அறிவித்துள்ளது.

நியூயார்க்கில் நேற்று செவ்வாய்கிழமை (24) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட 87 பேர் உரையாற்றினர்.

அதன்போது அங்கு உரையாற்றிய ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்; இஸ்ரேல் மீது ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை கண்டித்தார். ஆனால் பலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், ஹமாஸின் அந்தத் தாக்குதல்கள் “வெறுமனே” நடக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார்.

ஐ.நா செயலாளரின் உரையை பல நாடுகள் “மிகவும் சமநிலையான அணுகுமுறை” என்று வரவேற்றதாக, அல் ஜெசீரா தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் கோபமடைந்ததோடு, ஐ.நா செயலாளர் பதவி விலக வேண்டுமெனவும் கூறியுள்ளது.

பாதுகாப்பு சபை விவாதத்தில் கலந்துகொண்ட இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் மிகவும் வருத்தமடைந்தார் என்றும், நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் நடக்கவிருந்த பொதுச்செயலாளருடனான சந்திப்பை அவர் ரத்து செய்தார் எனவும் அல் ஜெசீரா குறிப்பிட்டுள்ளது.

“ஐ.நா பொதுச்செயலாளருக்கு எதிராக – இதுபோன்ற எதிர்வினைகளைக் காண்பது மிகவும் அசாதாரணமானது” என்று நியூயோர்க் இல் உள்ள அல் ஜசீராவின் ஊடகவியலாளர் கேப்ரியல் எலிசாண்டோ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்