வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

🕔 October 24, 2023

லங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2024 மார்ச் 31 வரை – இந்த சலுகை அமுலில் இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வரும் மேற்படி வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சு கடந்த வாரம் அறிவித்தது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பிரதமர் தினேஷ் குணவர்தன, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெனாண்டோ, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் சமர்பிக்கப்பட்டது.

பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வீசாவில் இருந்து விலக்கு அளித்ததன் நோக்கம், “இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகும். அதன்படி, வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 05 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று சுற்றுலா அமைச்சு கூறியுள்ளது.

இந்த உத்தேச வேலைத்திட்டம் – வீசா பெறுவதற்கு செலவிடும் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை தரும் போக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களுக்கு இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்