பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன?

🕔 October 20, 2023
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்

– மரைக்கார் –

க்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன.

‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தல்’ என்று , இலகுவாக நாம் புரிந்து கொள்ளலாம். அவ்வாறான சொத்துக்களின் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதல் வேண்டும். இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்களை எவ்வாறு கையாளுதல் வேண்டும் என்பது குறித்தும், ‘வக்ஃபு’ சொத்துக்களையும், அரச சொத்துக்களையும், அடுத்தவரின் சொத்துக்களையும் மோசடியாக அபகரிப்போருக்கு இறை தண்டனை எவ்வாறு அமையும் என்பதோடு, பொதுச் சட்டத்தின் பிரகாரம் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலிலும் இன்று பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது.

பொதுச்சொத்துக்களை அபகரிப்போர் குறித்து விழிப்பு வேண்டும்

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் குறித்து சமூகம் போதியளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உதாரணமாக அரச சொத்துக்களை – நமக்குத் தெரிந்தே ஒருவர் அபகரிக்கும் போது, அதனைக் கண்டிக்காமல் – அதனை உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தாமல், நக்கு ஏன் வீண் வம்பு என சும்மா இருந்தால் – ஏதோவொரு விதத்தில் அந்தப் பாவத்துக்கு நாமும் துணைபோனவர்களாகி விடுகிறோம்.

மறுபுறமாக பொதுச் சொத்துக்களை மோசடியான வழிகளில் அபகரித்துக் கொண்டவர்கள், சமய நிறுவனங்களிலும் சமய அறிவைக் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகிப்பதனையும் நாம் காண்கிறோம். இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உதாரணமாக நபரொருவர் பொதுச் சொத்துக்களை மோசடியாக அபகரித்தமை தொடர்பில் போதுமான ஆதாரம் நம்மிடம் இருக்குமானால், அந்த நபர்கள் சமூக நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிப்பதை அனுமதிப்பது கூடாது. அவர்களின் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுத்து, பகிரங்கப்படுத்தி – அவர்களை அந்தப் பதவிகளிலிருந்து நீக்குதல் வேண்டும்.

இதனையே இன்றைய ஜும்ஆ பிரசங்கம் வலியுறுத்தியது. ஆனால் இதனைச் செய்வதற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்?

‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்களை அல்லது பொதுச் சொத்துக்களை மோசடியாக அபகரித்தவர் நமது உறவினராக இருந்தால் – அது தொடர்பில் நமது நியாயம் ஒன்றாகவும், அதே தவறை வேறொருவர் செய்தால் நமது நமது நியாயம் வேறொன்றாகவும் இருக்கக் கூடாது.

பொதுச் சொத்துக்களை ஒருவர் மோசடியாக அபகரித்திருந்தால் – அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறான நபர்கள் சமூக நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிக்க இடமளிக்கக் கூடாது.

குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு ‘வக்ஃபு’ (நன்கொடையளிக்கப்பட்ட) சொத்துக்களையே சிலர் அபகரித்து வைத்திருக்கின்றனர். பொதுச் சொத்துகளை அபகரித்தால் யாரும் கேட்க மாட்டார்கள் எனும் தைரியத்திலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

இப்படியான ஆசாமிகள் ஓரிருவருக்கு நல்ல ‘மருந்து கட்டினால்’, ஏனையவர்கள் பயத்திலேனும் திருந்தி விடுவார்கள்.

அதற்கு சமூகம் தயாராக வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்