காஸா அல் அஹ்லி வைத்தியசாலையில் இஸ்ரேல் நரவேட்டை; 500 மக்கள் பலி: அமெரிக்க ஜனாதிபதியுடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான்

🕔 October 18, 2023

காஸா நகரில் இருக்கும் அல் அஹ்லி அரப் வைத்தியசாலை மீது இஸ்ரேல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஆகக் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரப் வைத்தியசாலையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பலஸ்தீன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், இச்சம்பவத்துக்குக் காரணம் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ரொக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. ஆயினும் இந்தக் குற்றச்சாட்டை அந்த அமைப்பு நிராகரித்திருக்கிறது.

இந்தத் தாக்குதலை குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரு வைத்தியர், ‘படுகொலை’ என்று கூறி அதைக் கண்டித்துள்ளார். மற்றொரு வைத்தியர் அந்த இடமே ஒரு பேரழிவின் காட்சியாகத் தோன்றுவதாக கூறியுள்ளார்.

அமெரிக்க தலைவருடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான்

காஸா வைத்தியசாலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க மற்றும் எகிப்து ஜனாதிபதிகளுடனான மாநாட்டை ஜோர்டான் ரத்து செய்துள்ளது. பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் முன்னதாக கூட்டத்தில் இருந்து விலகினார்.

அல்-அஹ்லி வைத்தியசாலை மீதான தாக்குதலில் இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.

உலகத் தலைவர்கள் வைத்தியசாலைத் தாக்குதலைக் கண்டித்ததால், ‘உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு’ ஐ.நா. தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலையடுத்து, காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 3,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்