ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல்

ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா – தெற்கு லெபனானில் நேற்று (13) வெள்ளிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரணத்துக்கு “மிகவும் வருந்துகிறோம்” (‘very sorry’) என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் எல்லைக்கு அருகிலுள்ள அல்மா அல்-ஷாப் என்ற இடத்தில் இஸ்ரேலின் திசையிலிருந்து வந்த ஏவுகணை வெடித்ததில், ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா கொல்லப்பட்டதோடு, மேலும 06 ஊடகவியலாளர்கள் காயமடைந்தனர்.
” ஊடகவியலாளரின் மரணத்துக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
எனினும் இஸ்ரேலிய இராணுவம் இந்த மரணத்துக்கான பொறுப்பை ஏற்கவில்லை.
“நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், நாங்கள் குறுக்கு விசாரணை செய்கிறோம். இது ஒரு சோகமான விஷயம்” என, அல் ஜசீராவைச் சேர்ந்த இருவர் உட்பட மேலும் 06 ஊடகவியலாளர்களும் காயமடைந்த சம்பவம் குறித்து ரிச்சர்ட் ஹெக்ட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்தக் கொலைகளுக்கான பொறுப்பை – “சட்டப்பூர்வமாகவும் தார்மீக ரீதியாகவும் இஸ்ரேல் ஏற்க வேண்டும்” என்று அல் ஜசீறா ஊடக வலையமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை இஸ்ரேலிய ஷெல் தாக்குதல் ஊடகவியலாளர்களைக் குறிவைத்திருக்கலாம் என்று எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.
“அவர்களைச் சுற்றி வேறு யாரும் இல்லை, சண்டையும் இல்லை, இராணுவ இடங்களும் இல்லை” என்று எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அல் ஜசீறாவிடம் தெரிவித்துள்ளது.