திருகோணமலை – கல்முனை பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு அக்கரைப்பற்று வரை அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டதால் பிரச்சினை: முறைகேடான நடவடிக்கை என குற்றச்சாட்டு

🕔 October 12, 2023
அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் தரித்து நிற்கும் – அனுமதி நீடிப்பு வழங்கப்பட்ட பஸ்கள்

– அஹமட் –

திருகோணமலையிலிருந்து கல்முனை வரை 10 வருடங்களாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும், மூன்று தனியார் பஸ்களுக்கு, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் முறைகேடாக அனுமதிப் பத்திரங்கள் நீடித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு கரையோ தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது.

கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இந்த அனுமதிப்பத்திரங்களை நீடித்து வழங்கியுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவிக்கிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹிர போகொல்லாகம பதவி வகித்த போது, இவ்வாறு திருகோணமலையிலிருந்து கல்முனை வரையில் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பஸ் ஒன்றுக்கு, அக்கரைப்பற்று வரை அனுமதிப்பத்திரம் நீடித்து வழங்கப்பட்டமையினை தாம் சுட்டிக்காட்டியமையினை அடுத்து, அந்த அனுமதியை அப்போது ஆளுநர் ரத்துச் செய்ததாகவும் குறித்த சங்கம் கூறுகிறது.

கல்முனை – அக்கரைப்பற்று பாதையில் குறுந்தூர போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களின் வருமானம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியமையினை அடுத்தே, குறித்த அனுமதியை அப்போது ஆளுநர் ரத்துச் செய்ததாக தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

இந்தப் பின்னணியில் திருகோணமலையிலிருந்து கல்முனை வரை போக்குவரத்தில் ஈடுபடும் மூன்று தனியார் பஸ்களுக்கு இவ்வருடம், அக்கரைப்பற்று வரை போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் அனுமதி நீடித்துக் கொடுக்கப்பட்டதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

“இதனையடுத்து நாங்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றமையினை அடுத்து, குறித்த பஸ்களின் அனுமதி நீடிப்பு ரத்துச் செய்யப்பட்டது” என, சங்கத்தின் செயலாளர் எஸ்.எம். பைறூஸ் கூறினார்.

ஆயினும் நேற்றைய (11) தினம் தொடக்கம் – மீண்டும் அதே மூன்று பஸ்களுக்கு, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை முறைகேடாக அனுமதி நீடிப்பை – கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வழங்கியுள்ளதாக தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில் கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் குறுந்தூர போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் நேரத்தில், மேற்படி அனுமதி நீடிப்பு வழங்கப்பட்ட பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட்டமையினால், இரு சாராருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து இவ்விடயம் அக்கரைப்பற்று பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

“இதனையடுத்து அக்கரைப்பற்றிலுள்ள தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸார் விசாரித்தபோது, எந்தவொரு நேர அட்டவணையும் வழங்கப்படாமல் மேற்படி மூன்று பஸ்களுக்கும் அனுமதிப்பத்திரம் நீடித்து வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்தது” என, செயலாளர் பைறூஸ் தெரிவித்தார்.

பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனைமற்றும் வாழைச்சேனை ஆகிய வீதிகளில் 05 – 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை, பயணிகள் பஸ் சேவை இடம்பெற்று வரும் நிலையில், மேற்படி மூன்று பஸ்களுக்கும் அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்