ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்

🕔 October 11, 2023

ஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைந்து உள்ளூர் விசாரணை நடத்துமாறு, இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள புதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட – ‘ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழு’வின் உறுப்பினர்களான பேராயர் மல்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட இந்தக் கடிதத்தில், முந்தைய விசாரணைகள் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

‘சோனிக் சோனிக்’ என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் விசாரணையை நிறுத்தியமை, அபு ஹிந்தை அடையாளம் காணத் தவறியமை, விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியமை, அமெரிக்க எஃப்.பி.ஐ உளவுத்துறை உறுப்பினரால் சி.ஐ.டி.யிடம் ஐபி முகவரி ஒப்படைக்கப்பட்ட நபர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை, குண்டுதாரி ஜெமிலுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இருந்த தொடர்பையும், கலனிகம வெளியேறும் இடத்தில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட லொறி ஒன்று கடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ராணுவப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை – சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது. இந்த விசாரணைகளைத் தடுக்கவும் நாசவேலை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்றும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

சேனல் 4 ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் இந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை சுதந்திரமான வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பார்வையில் நடக்க வேண்டும் எனவும், அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கடிதத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, சிலாபம் ஆயர் வலன்ஸ் மெண்டிஸ், காலி ஆயர் ரேமண்ட் விக்கிரமசிங்க, உதவி ஆயர்களான ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி, அன்டன் ரஞ்சித் மற்றும் மாக்ஸ்வெல் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முந்தைய கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என, அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்